கல்குடாவில் பிரதிக்கல்விப் பணிப்பாளர்கள் மூவர்  கடமையேற்பு.

(ஷோபனா ஜெகதீஸ்வரன்) கல்குடா கல்வி வலயத்தில் பிரதிக்கல்விப் பணிப்பாளர்கள் மூவர் புதிதாக கடமையேற்;கும் நிகழ்வு இன்று (10) புதன்கிழமை காலை 9.00 மணியளவில் வலய உத்தியோகத்தர்களின் அமோக வரவேற்புடன் சிறப்பாக நடைபெற்றது.

வலயக்கல்விப் பணிப்பாளர் த. அனந்தரூபன் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் கல்குடா வலயத்திலிருந்து இடமாற்றம் பெற்றுச் சென்ற பிரதிக்கல்விப் பணிப்பாளர்களான திருமதி.சிவசங்கரி கங்கேஸ்வரன், கனகசுந்தரம் ஜெயவதனன், சண்முகலிங்கம் தட்சணாமூர்த்தி ஆகியோருக்கு பதிலாக பிரதிக்கல்விப் பணிப்பாளர்களான நல்லதம்பி நேசகஜேந்திரன், சீவரெத்தினம் தயாளசீலன், தனபாலசிங்கம் இதயகுமார் ஆகியோர் சுபவேளையில் இன்று கடமையை பொறுப்பேற்றுக் கொண்டனர்.

கடமையேற்பு நிகழ்வின் பின்னர் பிரதான நிகழ்வுகள் வலயத்தின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. வலயக்கல்விப் பணிப்பாளர் தனது தலைமையுரையில் வலய கல்விசார் மற்றும் கல்விசாரா உத்தியோகத்தர்களின் அர்ப்பணிப்பு மிக்க செயற்பாடுகளினூடாக, திட்டமிட்ட அடிப்படையில் வலயத்தின் கல்வி அபிவிருத்திக்காக அயராது பாடுபட்டு வருகின்றனர். இக் கைங்கரியத்தில் புதிதாக மூன்று பிரதிக்கல்விப் பணிப்பாளர்களும் இணைந்து கொண்டுள்ளனர். அவர்களை அன்போடும் கண்ணியத்தோடும் வரவேற்கின்றாம். எல்லோரும் இணைந்து தொடர்ச்சியாக அர்ப்பணிப்போடு பணியாற்றுகின்ற போது நாம் கல்வி வெளியீடுகளை அதிகரிக்க முடியும் என்றார்.

பிரதிக்கல்விப் பணிப்பாளர்கள் தமதுரையில் இன்றிலிருந்து நாமும் உங்களுடன் இணைந்து பணியாற்றுவோம். அதனூடாக கல்குடா கல்வி வலயத்தின் கல்வி அபிவிருத்திக்காக ஒன்றிணைந்து பணியாற்றுவோம் எனக் குறிப்பிட்டனர்.

நிருவாகத்திற்கான பிரதிக்கல்விப் பணிப்பாளர் திருமதி. முஹமட் ஆபூபக்கர் றிஸ்மியா பாணு மற்றும் கோறளைப்பற்று கோட்டத்திற்கான கோட்டக்கல்விப்பணிப்பாளர் அற்புதராஜா ஜெயக்குமணன் ஆகியோர் வலயத்தின் கடந்தகால செயற்பாடுகளை நினைவுபடுத்தி உரை நிகழ்த்தினர்.

குறித்த நிகழ்வில் நிதி உதவியாளர் திருமதி.ப.லிங்கேஸ்வரன் மற்றும் ஆசிரிய ஆலோசகர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.