பாடசாலைகள் தவறுகின்ற போது வாய்ப்புக்கள் மாணவர்களுக்கு கிடைக்காமல் போகின்றன.

பாடசாலைகளில் இணைப்பாடவிதான செயற்பாடுகளை செயற்படுத்த தவறுகின்ற போது மாணவர்களுக்கான வாய்ப்புக்கள் இல்லாமல் போகின்றன என மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் யோ.ஜெயச்சந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட முதலைக்குடா மகா வித்தியாலயத்தில் இன்று(10) புதன்கிழமை இடம்பெற்ற இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டியில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார்.

வலயக்கல்விப் பணிப்பாளர் மேலும் உரையாற்றுகையில்,

விளையாட்டு விழா போன்ற இணைப்பாடவிதான செயற்பாடுகள் மாணவர்களுக்கு சிறந்த அனுபவத்தை கற்றுக்கொடுக்கின்றது. இதற்காக இதுபோன்ற நிகழ்வுகள் பாடசாலைகளில் இடம்பெற வேண்டும். அவ்வாறு இடம்பெறாத போது மாணவர்கள் பல்வேறான அனுபவங்களையும் பெற்றுக்கொள்ள முடியாதவர்களாகின்றனர். இதன்மூலம் கிடைக்கின்ற தலைமைத்துவம், முகாமைத்துவம்; போன்ற பண்புகள் கிடைக்காமலே போகின்றன. ஒழுக்கமுள்ள சமூகத்தினை கட்டியெழுப்ப வேண்டும். மாணவர் அணியும் உடையிலிருந்து நடை வரை மாற்றங்களை ஏற்படுத்தி சிறந்த பண்பாளர்களை சமூகத்திற்கு வழங்குவதற்கான இணைப்பாடவிதான செயற்பாடாக விளையாட்டு காணப்படுகின்றது. இதனால் விளையாட்டுக்கள் வருடாந்தம் இடம்பெற வேண்டும். மாணவர்களுக்கு வாய்ப்பை வழங்க வேண்டிய பொறுப்பு பாடசாலைகளுக்கு உண்டு. என்றார்.

வித்தியாலய அதிபர் இ.சுந்தரநாதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வலயக்கல்விப் பணிப்பாளர் யோ.ஜெயச்சந்திரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், மண்முனை தென்மேற்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் மூ.உதயகுமாரன் உள்ளிட்ட அதிதிகளும் கலந்து கொண்டனர்.
இதன்போது அணிநடை மரியாதை, உடற்பயிற்சி கண்காட்சி போன்ற நிகழ்ச்சிகள் இடம்பெற்றமையுடன், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வெற்றிக்கிண்ணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.