கருணாவுக்கு மக்கள் மத்தியில் எந்தவொரு செல்வாக்கும் கிடையாது. கருணாவைப்பற்றி கோத்தாவிடம் முறைப்பாடு.

தமிழ், முஸ்லிம் மக்களிடையே விரிசலை ஏற்படுத்தும் வகையில், விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) செயற்பட்டுக்கொண்டிருக்கிறார். இவரது செயற்பாடுகளினால் தமிழ், முஸ்லிம் இளைஞர்கள் தூண்டப்பட்டு இன மோதல்கள் இடம்பெறுவதற்கும் வாய்ப்புள்ளது என கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.சுபைர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபயவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த கடிதத்தில்,
30வருட பயங்கரவாத யுத்தத்திற்குள் அகப்பட்டு பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கிய வட,கிழக்கு மக்கள் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னர் ஐக்கியமாகவும், நிம்மதியாகவும் வாழ்ந்துவரும் சூழ்நிலையில், தமிழ், முஸ்லிம் மக்களிடையே விரிசலை ஏற்படுத்தும் வகையில், விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்.
இவரது செயற்பாடுகளினால் தமிழ், முஸ்லிம் இளைஞர்கள் தூண்டப்பட்டு இன மோதல்கள் இடம்பெறுவதற்கும் வாய்ப்புள்ளது.
கடந்த 30 வருடகாலமாக இடம்பெற்றுவந்த யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னர், நாட்டில் அமைதி, சமாதானம் ஏற்பட்டு மக்கள் நிம்மதியாகவும், சந்தோசமாகவும் வாழ்ந்துகொண்டிருந்த வேளையில், நல்லாட்சி எனும் போர்வையில் இந்த நாடு சிலரது கைகளுக்குள் சிக்குண்டு, சின்னாபின்னமாக்கப்பட்டது.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் நாட்டு மக்கள் தங்களுக்கு பேராதரவு தெரிவித்து ஆட்சி அதிகாரத்தினையும் வழங்கியுள்ளனர்.
யுத்தகாலத்தில் வட,கிழக்கு மக்கள் எதிர்நோக்கிய கஷ்டங்களையும், இன்னல்களையும் தாங்கள் நன்கறிவீர்கள். இந்த நாட்டை மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பொறுப்பேற்ற போது அவரது தலைமையில் பாதுகாப்பு செயலாளராக இருந்த நீங்கள், சர்வதேசத்தின் அழுத்தங்களுக்கும், அச்சுறுத்தல்களுக்கும் அடிபணியாது யுத்தத்தினை முடிவுக்குக் கொண்டுவந்து, இந்த நாட்டில் சமாதானத்தினையும், சகவாழ்வையும் ஏற்படுத்தி சரித்திரம் படைத்தீர்கள்.
அதற்குரிய நன்றிக்கடனாகவே, நாட்டு மக்களின் பேராதரவு உங்களுக்கு கிடைத்திருக்கின்றது.
யுத்தத்தினை முடிவுக்குக் கொண்டுவந்து நாட்டில் சமாதானத்தினையும், அமைதியையும் ஏற்படுத்துவதற்கு, பல்லாயிரக்கணக்கான இராணுவத்தினரையும், நாட்டினுடைய பொருளாதாரத்தினையும் நாம் இழந்திருக்கின்றோம்.
அதனாலேதான் எமது நாட்டில் வாழும் மக்கள் அச்சமின்றி சந்தோசமாகவும், நிம்மதியாகவும் வாழக்கூடிய சூழல் உருவானது. இவ்வாறு மிகவும் கஷ்டத்துக்கு மத்தியில் பெறப்பட்ட சமாதானத்தினை சீர்குழைப்பதற்கு ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
கிழக்கு மாகாணத்தில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்களின் இன உறவில் விரிசலை ஏற்படுத்தி இந்த நாட்டில் மீ்ண்டுமொரு பிரச்சினையை உருவாக்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.
இவ்வாறான செயற்பாடுகளினால் தமிழ் முஸ்லிம் இளைஞர்கள் தூண்டப்பட்டு, எதிர்காலத்தில் இன மோதல்கள் கூட இடம்பெற வாய்ப்புள்ளது. இந்த விடயம் குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்துவது காலத்தின் தேவையாகும்.
குறிப்பாக, விடுதலைப் புலிகளின் முன்னாள் கிழக்கு மாகாண தளபதியாக இருந்து செயற்பட்ட விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) அண்மைக்காலமாக இனவாத செயற்பாடுகளை தூண்டும் விதத்தில் செயற்படுகின்றார்.
அவர் தமிழ் மக்கள் மத்தியில் முஸ்லிம்களை பிழையாக விமர்சித்து வெறுப்புப் பேச்சுக்களைப் பேசி வருகிறார். இவருடைய செயற்பாடுகள் கிழக்கில் இன மோதல்களை ஏற்படுவிடும் என்கின்ற அச்சம் உருவாகியுள்ளது.
முஸ்லிம் தலைவர்கள் தமிழர்களை குழிதோண்டிப் புதைக்க வேண்டும் எனும் நோக்கத்தில் செயற்படுவதாகவும், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியினை தடுப்பதற்கும், அவர்களை அடக்கி ஆளுவதற்குமே தாம் கோட்டாபய ராஜபக்சவை ஆதரிக்கின்றோம் எனும் தொனியிலும் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றார்.
அதுமாத்திரமல்ல புதிதாக அமைக்கப்பட்ட அமைச்சரவையில் முஸ்லிம்கள் அங்கம் வகிக்காமை தனக்கு பெரும் சந்தோசம் எனவும் குறிப்பிட்டுள்ளார், இது அவரது இனவாத்தின் உச்ச வெளிப்பாடாகும்.
முஸ்லிம் சமூகத்திற்கும், மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தினருக்கும் எவ்வித முரண்பாடுகளும் கிடையாது. இந்த ஆட்சியில் முஸ்லிம்கள் பங்காளிகளாக இருந்து செயற்படுவதற்கும் ஆயத்தமாக உள்ளனர். கடந்த மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியிலும் முஸ்லிம்கள் பங்காளிகளாக இருந்து செயற்பட்டுள்ளனர்.
குறிப்பாக இந்த நாட்டில் வாழும் முஸ்லிம்கள் தனிநாடு கோரியோ, நாட்டுக்கு எதிராகவோ செயற்பட்ட வரலாறுகள் கிடையாது. அவற்றை கருணா அம்மான் முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.
கடந்த காலங்களில் தமிழ் மக்களை பிழையாக வழிநடாத்தி, விடுதலைப் புலிகள் இயக்கத்தில் முக்கிய பதவிகளை வகித்து, இந்த நாட்டுக்கு எதிராக யுத்தத்தினையும் வழிநடாத்திய கருணா அம்மான் முஸ்லிம் தலைவர்கள் தமிழர்களை குழிதோண்டிப் புதைக்க வேண்டும் எனும் நோக்கில் செயற்படுகின்றனர் எனக்கூறுவது வேடிக்கையாகவுள்ளது.
யுத்த காலத்தில் அநியாயங்களையும், அட்டூழியங்களையும் புரிந்து அப்பாவி மக்களை கொண்று குவித்து இந்த நாட்டை சீரழித்த அவர், சுயநல அரசியலுக்காகவே வீன்பழி சுமத்துகின்றார். அரசியல் அதிகாரம் ஒன்றினைப் பெறுவதற்காகவே அவர் இவ்வாறு செயற்படுகிறார்.
ஆயுதம் ஏந்தி எதனையும் சாதிக்க முடியாது என்பதனை உணர்ந்து கொண்ட கருணா அம்மான் அரசியல் நீரோட்டத்திற்குள் வந்து பதவிகளைப் பெற்று அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட போதும், இறுதியில் தமிழ் மக்களால் புறக்கனிக்கப்பட்டார்.
அவருக்கு தமிழ் மக்கள் மத்தியில் எந்தவொரு செல்வாக்கும் கிடையாது. அரசியல் வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டு, அரசியல் அதிகாரத்தினைப் பெற்றுக்கொள்வதற்காக தற்போது இனவாதம் பேசுகிறார்.
இவருடைய தீவிர செயற்பாடுகள் நாட்டினுடைய பொருளாதாரம், மக்களின் சுதந்திரமான செயற்பாடுகள் என்பவற்றை பாதிக்கக்கூடும்.
அத்துடன், மலர்ந்துள்ள புதிய ஆட்சிக்கும் பெரும் அவப்பெயரை ஏற்படுத்திவிடும். நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி இனங்களை ஒன்றினைத்து சகவாழ்வை ஏற்படுத்துவதற்கு உழைக்க வேண்டிய இக்காலகட்டத்தில், கருணா அம்மான் போன்றவர்களின் செயற்பாடுகள் அவற்றுக்கு குந்தகமாக அமைந்துவிடும்.
அராஜகத்துக்கும் வன்முறைக்கும் பழக்கப்பட்ட அவரால் ஜனநாயக நீரோட்டதில் பயணிக்க முடியாமலுள்ளது. எனவே அவரது நடவடிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும்.
அத்துடன் சமாதானத்தினை குழப்பும் யாராகவிருந்தாலும் தராதரம் பாராது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.