பயங்கரவாத சூழ்நிலையினை முறியடிப்பதற்கு என்னாலான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு தயாராகவிருக்கின்றேன்

இலங்கையில் பெருமளவான வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டு வருகின்றன. இவை பாரிய சேதங்களை ஏற்படுத்தக்கூடிய வெடிபொருட்கள், இவை இலங்கைக்கு எவ்வாறு கொண்டுவரப்பட்டது, இதற்கான நிதி எவ்வாறு கிடைத்தது என்பது தொடர்பான பூரண விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

இன்றைய சூழ்நிலையில் அரசியல் வேறுபாடுகளை மறந்து அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலமே நாட்டில் ஏற்பட்டுள்ள பயங்கரமான சூழ்நிலையினை முடிவுக்கு கொண்டுவர முடியும் எனவும் தெரிவித்தார்.

இன்று பகல் மட்டக்களப்பு கல்லடியில் உள்ள அவரது அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பொன்றை விநாயகமூர்த்தி முரளிதரன் நடாத்தினார். இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

அண்மையில் நடாத்தப்பட்ட குண்டுத்தாக்குதலில் உயிரிழந்துள்ளவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்தினையும் வேதனையும் தெரிவிப்பதுடன், இவ்வாறான சம்பவங்கள் நடைபெறும் என நாங்கள் கடந்த காலத்தில் வெளிப்படையாகவே தெரிவித்திருந்த நிலையிலும் அதனை யாரும் கருத்தில்கொள்ளாத நிலையிலேயே இவ்வாறான குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

சர்வதேச பயங்கரவாதத்திற்குள் இலங்கையும் உள்வாங்கப்பட்டு இவ்வாறான கொரூரமான தாக்குதல்கள் நடாத்தப்பட்டுள்ளன. இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.

புதிதாக பதவியேற்ற அரசாங்கம் இந்த நாட்டில் புலனாய்வுக் கட்டமைப்பினை முற்றுமுழுதாக பலவீனமடையச் செய்துள்ளது. அதன் காரணமாகவே இலகுவில் குண்டுத்தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இராணுவ புலனாய்வுக் கட்டமைப்பு என்பது மிகவும் வலுவானது. ஆனால் நல்லாட்சியென்று கூறிக்கொண்டு பல படைபுலனாய்வுத்துறை அதிகாரிகளை கைதுசெய்து பல விடயங்களை தடைசெய்தனர். முற்றுமுழுதாக புலனாய்வு இயங்காத காரணத்தினாலேயே இன்று இந்த நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.

கிழக்கு மாகாணத்திலேயே இந்த பயங்கரவாத தாக்குதலுக்கான அடித்தளம் தீட்டப்பட்டுள்ளது. காத்தான்குடியை மையப்படுத்தி இயங்கிய பள்ளிவாயல் ஊடாக இனவாதம் வெளிப்படுத்தப்பட்டு தொடராக மதவாதம் ஊட்டப்பட்டு பயங்கரவாத செயலாக வடிவம் எடுத்துள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இந்த தாக்குதலின் பின்னர் முதலைக் கண்ணீர் வடிக்கின்றனர். கிழக்கில் இந்த பயங்கரவாதம் அத்திவாரமிடுவதற்கு அவர்களும் ஒரு காரணமாகும். கிழக்கு மாகாண முஸ்லிம் அரசியல்வாதிகள் மேலோங்குவதற்கான வாய்ப்புகளை தமிழ் தேசிய கூட்டமைப்பே வழங்கியது. கிழக்கு மாகாண சபையிலும் அவர்களிடம் ஆட்சி அதிகாரங்களை வழங்கி அவர்களை மேலோங்கச்செய்யும் நடவடிக்கையினை தமிழ் தேசிய கூட்டமைப்பே செய்தது.

கிழக்கு மாகாணத்தில் வாழும் மக்கள் இந்த தாக்குதலுக்கு பின்பாவது இதனை உணர்ந்து செயற்பட வேண்டும். பல விடயங்களில் கிழக்கில் பல பிரச்சினைகளை தமிழ் மக்கள் எதிர்நோக்கி வந்தனர். தமிழர்களின் வளங்கள் அபகரிக்கப்பட்டன.

மட்டக்களப்பு பல்கலைக்கழகம் என்னும் பெயரில் அமைக்கப்பட்ட அறபுக்கல்லூரி பல பிரச்சினைகளை தோற்றுவித்துள்ளது. அரசாங்க அனுமதியைப் பெற்றுள்ளபோதிலும் அங்கு நடைபெறவுள்ள பாடங்கள் சிந்திக்க வேண்டிய விடயங்களாகும். முஸ்லிம் சட்டங்கள் தொடர்பாகவும் முஸ்லிம் மதவாதம் தொடர்பான பாடங்களையும் கற்பிப்பதற்கு அனுமதி எடுக்கப்பட்டுள்ளது.

இன்று ஏற்பட்டுள்ள இந்த பயங்கரவாத சூழ்நிலையினை முறியடிப்பதற்கு என்னாலான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு தயாராகவிருக்கின்றேன். நாங்கள் இந்த நாட்டில் அமைதியினை ஏற்படுத்துவதற்கு கடுமையாக உழைத்துள்ளோம். அந்த அமைதியினை சீர்குலைக்கும் வகையில் செயற்படுவதை நாங்கள் அனுமதிக்க முடியாது.

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பாராளுமன்றத்தில் ஏதிலிகள் போல் செயற்பட்டு வருகின்றனர். இதுபோன்ற விடயங்களுக்கு குரல் கொடுப்பதற்கே அவர்கள் அச்சமடைகின்றனர்.

சுமந்திரன் இதனை கோட்டபாய, மகிந்த ராஜபக்ஸவினர் திட்டமிட்டு செய்ததாக கூறுகின்றார். இவ்வாறான மடமைத்தனமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமானால் கிழக்கிலும் வடக்கிலும் மீண்டும் குண்டுவெடிப்பதற்கான வாய்ப்புகள்தான் உள்ளது. இதுபோன்ற விடயங்களில் பாதுகாப்பு தரப்பினருக்கு ஒத்துழைத்து இதுபோன்ற விடயங்கள் நிறுத்தப்பட வேண்டும்.

நன்றி

அதெரண