தமிழர்களுக்கு என்ன செய்தார்கள் ஜனாதிபதிகள்? ஏன் தேவை பொது வேட்பாளர்?

இலங்கையில் ஜனாதிபதித்துவ ஆட்சி முறையானது,2ஆம் குடியரசு யாப்பு மூலமாக 1978 இல் அறிமுகம் செய்யப்பட்டது.அந்த வகையில்,46 ஆண்டுகள் வரலாற்றில் தமிழர்களுக்கு சிங்கள ஜனாதிபதிகள் என்ன செய்தார்கள்? அதில் இருந்து தமிழர்கள் அறிந்தவை எவை? ஏன் தமிழர்கள் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்த வேண்டும்? தற்போதைய நிலையில் 2024 ஆணடுக்கான சிங்கள ஜனாதிபதி வேட்பாளர்கள் என்று பேசப்படுகின்றவர்கள் என்ன பேசுகின்றார்கள் என்பதை ஆராய்வோம்.
தமிழர்களின் தேசிய இனப் பிரச்சினை தொடர்பாக அநுர,சஜித்,ரணில்,ராஜபக்ச ஆகியோரிடமுள்ள தீர்வுகள் எவை என்பதை முதலில் பார்ப்போம்.

1) ‘சமஸ்டி தருவேன் என்றோ,13 வது திருத்தத்தைத் தருவேன் என்றோ நான் கூற மாட்டேன் ‘ என்று அநுர குமார கூறியுள்ளார்.அதாவது
13 வது திருத்தத்தையும் வழங்குவதைக் கூட அநுர விரும்பவில்லை. இதன் பொருள் என்ன? அநுரவிடம் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான தீர்வு இல்லை என்பது முன்கூட்டியே தெரிகின்றது.

2) 13வது திருத்தத்திலுள்ள பொலிஸ் அதிகாரங்களை இப்போதைக்குத் தர முடியாது என்று ரணில் கூறிவிட்டார்.அதாவது அவர் 13 மைனஸை வழங்க விரும்புகின்றார்.இருக்கின்ற 13வது திருத்த்தில் அதிகாரங்களை ஜனாதிபதி பிடுங்கவே நினைக்கிறார்.2005 ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ரணில் சமஷ்டித்தீர்வு பற்றிக் கூறியிருந்தார்.தற்போது இருக்கின்ற தீர்வையே ரணில் குறைக்க நினைக்கின்றார்.

3) தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வாக மாகாண சபை முறையை சஜித் ஏற்றுக் கொள்வது போல் அவரது பேச்சுகள் அமைகின்றன.அவரும் கூட சிங்களவர்கள் விரும்பாத பொலிஸ் அதிகாரத்தினை வழங்குவார் எனக் கொள்ள முடியாது.எனவே சஜித்தும் 13 மைனஸையே வழங்க விரும்புவார் என்பது புலனாகின்றது.

4) வடக்கு – கிழக்கு இணைப்பைப் பிரிப்பதற்கு நீதிமன்றம் சென்று அதனைப் பிரித்தவர்கள் ஜே.வி.பியினர்.அப்படியான போக்குடைய ஜே.வி.பியின் தலைவர் அநுரவை எப்படித் தமிழர்கள் நம்பி வாக்களிப்பார்கள்.

5) வடக்கு – கிழக்கு இணைப்பை எந்த சிங்கள வேட்பாளரும் விரும்ப மாட்டார்கள். அவ்வாறான இணைப்பு இல்லாத இனப்பிரச்சினைத்தீர்வு என்பது தமிழர்களை வடக்குத் தமிழர், கிழக்குத் தமிழர் என்று பிரதேசவாதத்தினை ஏற்படுத்தும் அரசியல் சூழ்ச்சியாகவே அமையும்.

6) நல்லாட்சி அரசாங்கத்தில் மைத்திரி – ரணில் இணைந்து பாராளுமன்றத்தை யாப்பு நிருணய சபையாக அமைத்து நிலையான நியாயமான தீர்வு வழங்கப்போவதாகக் கூறப்பட்டது.தீர்வு நிச்சயம் கிடைக்கும் என்று இடித்துரைக்கப்பட்டது, தீர்வு கிடைக்காது விட்டால்,அரசியலில் இருந்து நீங்குவேன் என்றும் எமது சக பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் உயர் நம்பிக்கையோடு கூறினார்.ஆனால் எதுவும் நடக்கவில்லை.

7) 1994 ஆம் ஆண்டு சமாதான தேவதை வடிவம் தாங்கி சந்திரிக்கா அம்மையார் ஜனாதிபடுத்தேர்தலில் போட்டியிட்டு தமிழர்களின் உயர் சதவீதமான வாக்குகளைப் பெற்றார்.மட்டக்களப்பு படடிருப்புத்தொகுதியில் 90 வீதத்திலும் அதிகமாக தமிழர்கள் வாக்களித்தனர்.6 மாதகாலத்துள் தமிழருக்கான தீர்வு கிடைக்கும் என்றார்.11 வருடங்கள் ஆட்சி செய்தார்.எதுவும் தரவில்லை.

8) ஜெயவர்தனா போர் மூலமாகத் தமிழர்களை அடக்கி ஒடுக்கலாம் அதன் மூலமாகத் தமிழர்களை ஒற்றையாட்சியாட்சியில் சிங்கள பெளத்த மேலாதிக்கத்தின் கீழ் கட்டிப்போடலாம் என்றே நினைத்தார்.ஆனால் இந்தியாவின் நிர்ப்பந்தத்தால் மாகாணசபை முறையை, ஜெயவர்தன 13வது திருத்தம் மூலம் நிறைவேற்றினார். அதுவும் முழுமையான தீர்வாக அமையவில்லை.

9) அடுத்து ஜனாதிபதியான பிரேமதாச அவர்கள் ஜயவர்தன பின்பற்றிய போரினையே தீர்வாகக் கருதினார்.

10) இடைக்கால ஜனாதிபதியான விஜயதுங்க ஏறத்தாழ மைத்திரி போன்று விடய ஞானம் குறைந்த தலைவராக இருந்து போர் புரிந்து காலத்தைக்கடத்திச் சென்றார்

11) ஜனாதிபதியான மகிந்த ராஜபக்ச ஆயுதப்பிரச்சினைக்கு ஆயுதம் மூலமாகத்தீர்வு, அரசியல் பிரச்சினைக்கு அரசியல் மூலம் தீர்வு என்று கூறி,பல நாடுகளின் துணையோடு இனவழிப்பு யுத்தம் நடாத்தி முடித்தார். யுத்தத்தின் பின்னர் 13 பிளஸ் தருவேன் என்றார்.எதுவுமே தரவில்லை.வடக்கு கிழக்கில் சிங்கள மேலாதிக்கத்தை நிறுவ முற்பட்டார்.

12) சிங்கள யுத்த நாயகன் ஜனாபதியான கோத்தபாய தமிழர்களுக்கு எந்தத் தீர்வையும் முன்வைக்கவில்லை. அவர் மாகாண சபை முறையை இல்லாது ஒழிக்க விரும்பினார். ஆனால் அவரே 2 ஆண்டுகளில் பதவியில் இருந்து துரத்தப்பட்டார்.

இவைதான் சிங்கள ஜனாதிபதிகள் எமக்குத் தந்த தீர்வுகள் ஆகும். இப்படியாகச் சரித்திரம் இருக்கும் போது, தமிழர்கள் எந்த முகத்தோடு என்ன நியாய அடிப்படையில் எதிர்வரும் தேர்தலில் சிங்கள வேட்பாளர்களுக்கு வாக்களிக்க முடியும்? தமிழ்த் தேசியப்பாதையில் நிற்கின்ற தமிழர்களுக்கே இதனை நினைவூட்டுகின்றோம். தம்மைத் தமிழ்த் தேசியத் தமிழர் என்று கூற விரும்பாத,தம்மை ஶ்ரீலங்கன் என்று கூறுவதில் பெருமை கொண்டு சிங்கள அரசியலுடன் இணக்க அரசியல் செய்ய விரும்புகின்ற,அமைச்சர் பதவிகளை விரும்புகின்ற தரகர் நிலை அரசியல்வாதிகளுக்கு இந்த ஞானம் வருமா என்பது சந்தேகந்தான்.

இந்நிலையில் தமிழர் என்கின்ற தமிழ்த் தேசிய இனமானது பொது வேட்பாளர் பற்றிச் சிந்திப்பதில் பலமான நியாயங்கள் உண்டு.அவற்றைப் பார்ப்போம்.

1) வடக்கு-கிழக்குத் தமிழர்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு இதுதான் என்பதை வரையறை செய்து,பொது வேட்பாளர் மூலமாக, மக்களாணை ஊடாக உறுதி செய்தல்.

2) சிங்கள ஜனாதிபதி வேட்பாளர்கள் தமிழர்களுக்கு எந்தத் தீர்வையும் தருவதற்குத் தயாரில்லாத நிலையில்,அவர்களை இனியும் நம்ப மாட்டோம் என்பதை சர்வதேசத்திற்கு மக்களாணை மூலமாக பலமாக எடுத்துரைத்தல்

3) கடந்த 75 ஆண்டுகளில் தமிழர்கள் கற்றுக் கொண்ட பாடத்தில் இருந்து, பெற்றுக்கொண்ட ஞானத்தை தமிழர்கள் ஒரே குரலில் எந்துரைக்க வாய்ப்பளித்தல்.

4) தமிழ்த் தேசியக் கட்சிகளை கொள்கை கோரிக்கை ரீதியாக ஒரே நிலைக்குக் கொணர்ந்து, பொதுவேட்பாளர் மூலமாக ஒற்றுமைப்படுத்தல்

5) தமிழர்களை வலுவாக ஒற்றுமைப்படுத்துவதற்கு தமிழர்களின் மக்களாணையினை வாய்ப்பாகப் பயன்படுத்தல்

6) யுத்தத்திறகுப் பிற்பட்ட காலத்தில் தமிழர்களின் எண்ணத்தையும், தீர்வினையும் ஜனநாயக ரீதியாக எடுத்துரைத்தல்

7) புலத்தில் உள்ளவர்கள்,புலம் பெயர்ந்தவர்கள் என்கின்ற இரு தரப்புத் தமிழர்களையும் இறுக்கமாக இணைத்தல்.

8) புத்தியாளர்கள்,சிவில் சமூகம், ஊடகவியலாளர்கள், தமிழ்த் தேசிய ஆதரவாளர்கள் அனைவரையும் பொது வேட்பாளர் மூலமாக வலுவாக ஐக்கியப்படுத்தல்

9) தமிழ்த் தேசியக் கட்சிகளை வலுவிழக்கச் செய்கின்ற பேரினவாத அரசியல்வாதிகளின் தரகர் நிலை அரசியல்வாதிகளை அடையாளம் கண்டு அவர்களை அகற்றுதல்

10) சலுகை ரீதியான அரசியலுக்குள் ஈர்க்கப்ட்டுள்ள இளம் பராயத்தினரை தமிழ்த் தேசிய அரசியலுக்குள் உள்வாங்குதல்.அதாவது நாம் தமிழர்கள், நாம் தமிழ்த் தேசிய இனம், நமக்கோர் இலக்குண்டு என்பதை பொது வேட்பாளர் மூலமாகவும், மக்களாணை மூலமாகவும் உறுதி செய்தல் போன்ற விடயங்கள் அடங்கும்.

தமிழர்கள் ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துவது என்கின்ற விடயத்தில், கரிசனை செலுத்த வேண்டிய நிபந்தனைகளும் உள்ளன.அந்த வகையில் நிறுத்தப்படுகின்ற வேட்பாளர் வடக்கு கிழக்குத் தமிழர்கள், மற்றும் தமிழ் பேசும் சமூகத்தினர் மத்தியில் நன்மதிப்பைப் பெற்றவராகவும் தமிழ்த் தேசியவாதியாகவும்,கடந்த காலத்தில் கறைபடியாதவராகவும் இருக்க வேண்டும். மேலும் வடக்கு கிழக்கு தவிர்ந்த ஏனைய பிரதேசத் தமிழ் பேசும் சமூகத்தினர் மத்தியிலும் நன்மதிப்புடையவராக இருப்பதும் விரும்பத்தக்கதாகும். அதனை விடவும் தமிழ்த்தேசியப் பரப்பிலுள்ள சகல தமிழ்த் தேசியக் கட்சிகளையும் சமத்துவமாகக் கணிக்கத்தக்க பண்பும் இருக்க வேண்டும். இப்படியான அறிவுபூர்வமான வேட்பாளர் வடக்கு கிழக்கில் உள்ள பதினொரு இலட்சம் தமிழ் வாக்குகளில், ஐம்பது வீதத்திலும் அதிகமான வாக்குகளை மக்களாணையாகப் பெற வல்லவராக இருப்பதும் அவசியமாகும். 50 வீதத்தையும் தாண்டிக் கணிசமான சதவீத வாக்குகளைப் பெற்றால்,அது உத்தமமாக இருக்கும்.

தமிழ் பேசுகின்ற முஸ்லிம்கள் விடயத்திலும் பொது வேட்பாளர் கரிசனை செலுத்துவது வரவேற்கத்தக்க விடயமாகும்.தமிழ் மொழியால் ஒன்றுபட்ட இரு சமூகங்கள் பேரினவாதத்தின் நிரந்தரமற்ற சலுகைகளில் மூழ்கிவிடாமல் நிலையான நியாயமான தீர்வை அடைவதற்கு வேண்டிய முயற்சியினை எடுக்க வேண்டும். பேரினவாதம் பிரித்தாள்வதற்கு இடமளிக்கக் கூடாது.

மேலும் பொதுவேட்பாளர் வடக்குக் கிழக்கு வாக்குகளில் 50 வீதத்திலும் குறைவான வாக்குகளை எடுக்கவே கூடாது. அவ்வாறு குறைந்தால்,அது தமிழர்க்கு அது விசப்பரீட்சையாக அமைந்துவிடும். தமிழர்களே தமிழ்த் தேசியக் கோரிக்கையினை நிராகரித்து விட்டதாக பேரினவாதிகள் மட்டுமல்லாமல்,சலுகை வாதிகள்,தரகர் நிலைத் தமிழ் அரசியல்வாதிகள் தமிழ்த் தேசியத்தை மலினப்படுத்தி தமிழர்களை ஒதுக்க முற்படுவார்கள்.அதேவேளை, முதலில் சிங்கள வேட்பாளர்களிடம் தமிழர் தீர்வு தொடர்பாகப் பேரம் பேசி அவர்களது நிலைப்பாட்டினை தமிழர்கள் மத்தியில் வெளிப்படுத்த வேண்டியதும் அவசியமாகும்.தமிழர்கள் 5 வருட கால சலுகை அரசியல்,கற்றுக்குட்டி அரசியல், சுத்துமாத்து சுயநல அரசியல்களில் இருந்து முழுமையாக விடுபட வேண்டும்.
தமிழர்களைக் கண்காணித்துக் கட்டுப்படுத்த யாருமில்லை என்பதற்காக சுயநலத்தில் திழைத்து மக்களை மறந்து அரசியல்வாதிகள் நடக்கக் கூடாது.