உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நினைவாக சர்வமத தலைவர்கள் நல்லெண்ண விஜயம்

(ஏறாவூர் நிருபர் எம்ஜிஏ நாஸர்)  

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று 21.04.2024 இன்றுடன் ஐந்து வருடங்கள் பூர்த்தியடைந்துள்ளதையிட்டு வடக்கு கிழக்கு மாகாணங்கள் உட்பட பல்வேறு  பகுதிகளில் நினைவு நிகழ்வுகள் நடைபெற்றன.

அந்தவகையில் மட்டக்களப்பு – கிரான் மெதடிஸ்த திருச்சபைக்கு சர்வமத தலைவர்கள் நல்லெண்ண விஜயம் மேற்கொண்டனர்.

ஏறாவூர் பிர்தௌஸ் பவுண்டேஷன் இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தது.

சமூக சேவகரும் பவுண்டேஸனின் ஸ்தாபகத் தலைவருமான ஏஎம்எம் பிர்தௌஸ் தலைமையில் பௌத்த இந்து இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மத தலைவர்கள் இவ்விஜயத்தில் இணைந்திருந்தனர்.

அருட்தந்தை உதயகுமார் தலைமையில் உவெஸ்லி மண்டபத்தில் சிறப்பு நிகழ்வும் நடைபெற்றது.

தாக்குதலில் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஒரு நிமிட மௌன பிரார்த்தனை நடாத்தப்பட்டது.

இதையடுத்து சிறுவர்களுக்கு இனிப்புப்பண்டங்கள் பகிரப்பட்டன.

மதத்தலைவர்கள் தமது கவலையை வெளியிட்டனர்.

சுர்வமதத்தலைவர்கள் இங்கு கருத்துத் தெரவிக்கையில் – உயிர்த்த ஞாயிறன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் உல்லாச விடுதிகளில் நடாத்தப்பட்ட குண்டுத்தாக்குதலில் வெளிநாட்டுப்பிரஜைகள் 40 பேர் சிறுவர்கள் 45 பேர் உள்ளிட்ட 253 பேர் மிலேச்சத்தனமாகக் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் நடைபெற்று தற்போது ஐந்து வருடங்கள் கடந்துள்ள போதிலும் இதுவரை தாக்குதல் சூத்திரதாரிகள் வெளிப்படுத்தப்படவில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதிகிடைக்கவில்லை என்ற ஆதங்கம் உள்ளது. இந்நிலையில் தற்போதைய ஜனாதிபதி முழுமையான விசாரணையொன்றை நடாத்தி நீதியை வழங்குவார் என்ற நம்பிக்கையுடன் இருப்பதாகக் குறிப்பிட்டனர்.