தலவாக்கலையில் பாரிய தீ குடியிருப்புகள் எரிந்து நாசம்

(தலவாக்கலை பி.கேதீஸ்)

தலவாக்கலை மிடில்டன் (பெரிய மல்லியப்பு) தோட்ட லயன் தொடர் தொழிலாளர் குடியிருப்பொன்றில் நேற்று முன் தினம் இரவு (15) ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 12 வீடுகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

இத்தீ விபத்தில் 7 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதோடு 5 தொழிலாளர் குடியிருப்புகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன, இதனால் 12 குடும்பங்களைச் சேர்ந்த 49 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட 3 குடும்பங்கள் தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலய பாடசாலை மண்டபத்திலும் ஏனையோர் உறவினர் வீடுகளிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இத்தீ பரவல் ஏற்பட்டதையடுத்து தோட்ட மக்கள், தலவாக்கலை பொலிஸார் என பலரின் முயற்சியில் பல மணி நேர போராட்டத்தின் பின்னர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இந்த தீப்பரவல் காரணமாக எவருக்கும் பாதிப்பு ஏற்படாத போதிலும் தொழிலாளர்களின் பெறுமதிமிக்க உடைமைகள் உட்பட உடு துணிகள், தளபாடங்கள் அத்தியாவசிய ஆவணங்கள் உள்ளிட்ட அனைத்தும் தீக்கிரையாகியுள்ளன.

தீ பரவல் ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை கண்டறியபடாத நிலையில் இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப்பொருட்களை வழங்க தோட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.