இன்றைய அரசு பேரினவாதத்துக்கு முன்னுரிமை வழங்கி வருவதால் மக்கள் மத்தியில் அச்சநிலை. நாளை என்ன நடக்குமோ என்ற ஐயப்பாடு

ஆயர் இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை

(தலைமன்னார் நிருபர் வாஸ் கூஞ்ஞ) 

இன்றைய அரசு பேரினவாதத்துக்கு முன்னுரிமை வழங்கி வருவதால் மக்கள் மத்தியில் அச்சநிலை. நாளை என்ன நடக்குமோ என்ற ஐயப்பாடும் நிலவத் தொடங்கியுள்ளது. ஆகவே நாம் இறை திருவுளத்தை அறிந்து  கவனத்துடன் செயல்பட வேண்டியவர்களாக இருக்கின்றோம் இதற்கு செப வாழ்வு அவசியம் என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை இவ்வாறு தெரிவித்தார்.

சனிக்கிழமை (15.08.2020) நடைபெற்ற மன்னார் மறைமாவட்டத்pன் யாத்திரிகர் ஸ்தலமான மடு பெருவிழாவின்போது மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை தனது மறையுரையில் தொடர்ந்து தெரிவிக்கையில்

மடு அன்னையின் பாதத்தில்  தாழ்பணிந்து மன்றாடுவதற்காக நீங்கள் பல திசைகளிலிருந்தும் இங்கு வந்து ஒன்றுகூடியுள்ளீர்கள். அனைவரையும் அன்புடன் நாங்கள் வரவேற்று நிற்கின்றோம்.

அன்னையின் விண்ணேற்பு விழாவை முழுத் திருச்சபையும் கொண்டாடுகின்றது. இவ் அன்னையின் பெருவிழா வாழ்த்துக்களையும் வழங்கி நிற்கின்றேன்.

கொரோனா நோய் எம் ஒவ்வொருவரையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் இக் காலக்கட்டத்தில் சுகாதார கட்டுப்பாட்டுக்கு மத்தியிலும் நோயின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் நீங்கள் இங்கு வந்திருக்கின்றீர்கள்.

இந்த அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் நீங்கள் இங்கு வந்திருப்பதால் நிச்சயம் மருதமடு அன்னை உங்களை கைவிட மாட்டாள் என்பது எமது நம்பிக்கை. இந்த நம்பிக்கையில் நாம் இவ் விழாவில் கலந்து கொள்வோம்.

1950 ம் ஆண்டு திருத்தந்தை 12 ம் பத்திநாதர் மரியாள் விண்ணேற்பம் அடைந்ததை கத்தோலிக்க கோட்பாடாக அறிவித்தார்.

அன்னை மரியாள் கிறி;ஸ்துவை தாங்கிய ஒரு பேழையாக இருந்தமையால் இறைவன் மரியாளை விண்ணகத்துக்கு அழைத்துச் சென்றதையே இவ் விழா எமக்கு நினைவூட்டுகின்றது.

மரியாள் விண்ணகத்துக்கு அழைத்துச் சென்றமைக்கு விவிலியம் எமக்கு இரு விடயங்களை தருகின்றது. முதலாவதாக மீட்புப் பணியில் ஒத்துழைத்தது. அடுத்தது மரியாளின் சீடத்துவம்.

ஏவாளாகிய ஒரு பெண்ணால் இழந்ததை இன்னொரு பெண்ணாகிய மரியாளால் மீட்பு பெற வேண்டும் என்ற இறை சித்தத்தை அவள் ஏற்றுக் கொண்டாள்.

கடவுளின் வார்த்தையை தன் உள்ளத்தில் இருத்தி அதை செயல்படுத்தி தனது வாழ்வில் செயல்படுத்தியவள் மரியா.

நமது மீட்புக்காக தன்னை அர்பணித்த பிறர் நலவாதி மரியா. இதோ உமது அடிமை என்று சொல்லி தாழ்ச்சியாள் தூண்டப்பட்டவள் மரியா. தான் கடவுளால் குற்றமற்றவளாக படைக்கப்பட்டு மணுக்குள மீட்புக்காக ஒரு தியாக தீபமாக திகழ்ந்தவள் மரியா.

இவற்றின் குணங்களைக் கொண்ட அன்னை மரியாளைத்தான் விண்ணேற்பம் அடைய வழி சமைத்தது. ஆகவே நாமும் இவளைப் போன்று இந்த நற்பண்புகளை கொண்டிருந்தால் நாமும் இறைவனால் மீட்புப் பெறுவோம்.

நாம் மரியாளின் சீடத்துவத்தை நோக்கும்போது தனது மகன் கிறிஸ்துவின் தனிப்பெரும் சீடராக மரியாள் திகழ்ந்தாள். மற்றைய சீடர்களுக்கு ஒரு முன்மாதிரி சீடராகவும் மரியாள் திகழ்ந்தாள்.

உண்மையான சீடன் மலைப் பொழிவுகளை கடைப்பிடிக்க வேண்டும். இயேசுவை பின்பற்றி தனது வாழ்வில் துன்பங்களை பொறுமையோடு ஏற்றுக் கொள்வது. கடவுளின் வார்த்தைகளை கேட்டு அவற்தை தனது உள்ளத்தில் இருத்தி செயல்பட வேண்டும். கடவுளின் விருப்பை ஏற்று அவற்றின்படி நடப்பவனே உண்மையான சீடனாவான்

இன்று இந்த நவீன காலத்தில் எமது மனதை குழப்பி இறைவனின் பரிமாணத்தை பார்க்கமுடியாது இருக்கும் காரணிகள் பல உண்டு.

கவலை, பயம், விவேகமற்ற வேகம் பேராசை இவ்வாறு பட்டியல் இடலாம். நாம் இறைவனுடன் இணைவதற்கு அன்னை மரியாள் சிறந்த எடுத்துக் காட்டாக இருக்கின்றாள்.

இரக்கம் உள்ளோர் பேரு பெற்றோர், தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர். இவைகளை எமது வாழ்வில் கடைப்பிடிக்கவே நாம் அழைக்கப் பெற்றுள்ளோம்.

தற்பொழுது போதைப் பொருள் பிரச்சனைகள், சண்டைச் சச்ரவுகள், எங்கள் மத்தியில் ஒற்றுமையில்லாத நிலமை, மற்றையவர்களை ஏற்றுக் கொள்ளாத நிலமை இவற்றால் நாம் இறைவனை கண்டுக் கொள்ளாத நிலமைக்கு தள்ளப்படுகின்றோம்.

அன்பியங்கள் இறை வார்த்தைகளை அறிந்து அதை தங்கள் வாழ்வில் கொண்டு செல்ல வேண்டும். மரியன்னiபோல் நாமும் வாழ வேண்டுமானால்  செப வாழ்வு மிக அவசியமானது.

நாட்டில் இன்றைய அரசியல் நிலை. இந்த அரசு பேரினவாதத்துக்கு முன்னுரிமை வழங்கி வருவதால் எமது எதிர்காலம் எப்படி இருக்கும்  என்ன நடக்குமோ என்ற ஐயப்பாடுகள் ஏற்பட்டுள்ளன. இதனால் எம் மத்தியில் அச்சநிலையும் ஏற்பட்டுள்ளன.

ஆகவே நாம் இறை திருவுளத்தை அறிந்து  கவனத்துடன் செயல்பட வேண்டியவர்களாக இருக்கின்றோம். இறைவனுக்கு சான்று பகிரும் மக்களாக இருக்க நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.

மரியன்னை எம்மை ஒருபோதும் கைவிட மாட்டாள் என்ற ஆழமான நம்பிக்கையுடன் அவவிடம் வேண்டி நிற்போம் என்றார்.