பேரினவாத சக்திகளின் செயற்பாடு காரணமாக கிழக்கு மாகாணத்தின் இருப்பு பறிபோகும் நிலை- மு.ஞானப்பிரகாசம்

இப்போது பேரினவாத சக்திகளின் செயற்பாடு காரணமாக கிழக்கு மாகாணத்தின் இருப்பு பறிபோகும் நிலை காணப்படுவதாக  தமிழ் தேசிய கூட்டமைப்பின்வேட்பாளர் மு.ஞானப்பிரகாசம்  தெரிவித்தார்.

தமிழ்தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளரும்,பொறியியலாளருமான முருகேசபிள்ளை ஞானப்பிரகாசம் அவர்களின் தேர்தல் பிரச்சாரத்துக்கான பிரதான அலுவலகம் நாவற்குடாவில்  திங்கட்கிழமை(6) மணியளவில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பாளர்  மா.நிஸ்காந்தராஜா(சூட்டி)தலைமையில் திறந்து வைக்கப்பட்டது

நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றுகையில்

தமிழ் மக்களின் கல்வி, இருப்பு, பண்பாடு, கலாச்சாரம் முறையாக கிராமங்கள் மற்றும் நகரங்கள் தோறும் பாதுகாக்கப்பட வேண்டுமாயின் தமிழ் மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பை வாக்குரிமையினைப் பயன்படுத்தி பலப்படுத்த வேண்டும். தற்போதைய சூழ்நிலையில் தமிழ் மக்களின் வாக்குகள் சிதறடிக்கப்படுமாயின் தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அடையாளம் நாட்டிலே இல்லாமல் போகும் நிலை ஏற்படும்.

பேரினவாத கட்சிகள் தமிழ் பெயரில் கட்சிகளை உருவாக்கி தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடிப்பதற்கு தமிழ் மக்களுக்கு படுகுழி வெட்டியிருக்கின்றார்கள்.
அக் குழிக்குள் தமிழ் மக்கள் வீழ்ந்து விடக் கூடாது. நாம் அனைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு நூறு வீதம் வாக்களிக்க வேண்டும்.மாற்றுக் கட்சிக்கு வாக்களித்தால் நாம் எமது வரலாற்றை இழக்க நேரிடும். இப்போது தமிழ் தேசிய கூட்டமைப்பை பலமிழக்கும் செயற்பாட்டில் சில்லறைக் கட்சிகள் களமிறக்கப்பட்டுள்ளது. எனவே தமிழ் மக்கள் சில்லறைக் கட்சிக்கும், பேரினவாதக் கட்சிக்கும் சோரம் போகாமல் தமிழ்மக்களின் ஆதிக்கட்சியான தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு வாக்களியுங்கள் எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் தமிழரசுக்கட்சியின் வேட்பாளர்களான கி.துரைராஜசிங்கம்,ஞா.ஸ்ரீநேசன்,மா.உதயகுமார்,முன்னாள் மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம்,மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன்,ஜனநாயக போராளிகள் கட்சியின் உபதலைவர் ந.நகுலேஸ்,கட்சியின் கொள்ளை பரவுச்செயலாளர் ப.கோணேஸ்,மாநகரசபை உறுப்பினர்கள்,உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்கள்,தமிழ்தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்கள்,பொதுமக்கள் ,பெண்கள்,அமைப்பினர்கள் கலந்துகொண்டார்கள்.