இன்று நவநாத சித்தரின் 122 ஆவது குருபூஜை நிகழ்வு

( வி.ரி. சகாதேவராஜா)
மலையகத்தின் பிரசித்திபெற்ற நாவலப்பிட்டி குயின்ஸ்பெரி  நவநாத சித்தரின் 122 ஆவது குருபூஜை அவரது ஆலயத்தில்  இன்று (24) ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

நவநாத சித்தரோடு இலங்கை வந்து காரைதீவில் சமாதியான சித்தானைக்குட்டி சுவாமி ஆலய நிர்வாகத்தினரும் கலந்து கொள்ள நேற்று பயணமாகினர்.
நவநாத சித்தர் 1902. 03.24 இல் பங்குனி உத்தரநாளில் நாவலப்பிட்டி குயின்ஸ்பெரி தோட்டத்தில் சமாதி அடைந்தார்.
நாவலப்பிட்டி நகரில் இருந்து 19 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள சிற்றூர் தான் குயின்ஸ் பெரி. இங்கு தான் நவநாத சித்தர் ஆலயம் அமைந்துள்ளது.
ஒரே நேரத்தில் ஒன்பது இடத்தில் இருக்கும் வல்லமைக் கொண்ட நவநாத சித்தரின் இலங்கை வருகை முற்றிலும் சுவாரஸ்யமானது. நாவலப்பிட்டி குயின்ஸ்பெரி தோட்ட பெரியக் கங்காணி இந்தியாவில் இருந்து வருகை தந்தவர். அவரும் அவர் மனைவியும் இந்தியாவில் இருந்து இலங்கை வரும் போது நவநாத சித்தர் கங்காணியின் மனைவியிடம் எங்கே செல்கிறீர்கள் என வினவியுள்ளார், தாங்கள் இலங்கைக்கு செல்வதாக அவர் கூறியதும் தானும் அவர்களுடன் வர புறப்பட்டாராம் நவநாத சித்தர்.
ஆனால் கங்காணியின் மனைவி தாங்கள் மலைநாட்டுக்கு செல்வதாகவும் அதிக குளிர், மழை நிறைந்த இடம் என்று கூறி நீங்கள் அங்கு வந்து காலநிலையை சமாளிக்க மாட்டீர்கள் என அவரை அங்கேயே விட்டுவிட்டு வந்து விட்டார்கள். ஆனால் அவர்கள் தலைமன்னார் வந்தடைந்த வேளையில் நவநாத சித்தரும் தலைமன்னாரை வந்திருப்பதை பார்த்து வியந்து போயுள்ளனர் கங்காணி குடும்பத்தார்.
இவர்களுடன் குயின்ஸ்பெரி தோட்டத்தை நோக்கி தனது பயணத்தை ஆரம்பித்தார் நவநாத சித்தர். அங்கே சென்று வனாந்தரத்தில் கற்குகை ஒன்றில் தங்கியிருந்து தவம் செய்தார். அவர் தங்கியிருந்த குகை அருகே
தேயிலை மலைக்கு வேலைக்கு செல்லும் பெண்கள் தங்களின் குழந்தைகளை விளையாட விட்டு செல்வது வழக்கமாம். அப்படி குழந்தைகளை விட்டுச் சென்றபோது அதில் ஒரு குழந்தை அவரை பார்த்து வரைந்ததாகவும் அங்குள்ள மக்கள் சொல்கிறார்கள். இன்றுவரை அந்த நிழற்படம் இவ் ஆலயத்தில் இருப்பதுடன் நவநாத சித்தர் இப்படித்தான் இருந்திருப்பார் என்பதையும் இன்றைய தலைமுறையினர் தெரிந்துகொள்ள உதவியாகவும் உள்ளதாக சொல்கிறார்கள்.
தை மாதத்தில் வனபோசன நிகழ்வு நடைபெறுகிறது.
இந்த வனபோசன நிகழ்வு மிகப் பிரசித்தமானது. வழிபாடு செய்து இந்த வனபோசனத்தில் கொடுக்கப்படும். உணவை உண்டால் குழந்தைப்பாக்கியம் கிடைக்கும் என்பது பலரது நம்பிக்கை, பலர் குழந்தைப்பேறு இன்றி நவநாதசித்தரை தரிசித்தமையால் அவரின் அனுக்கிரகத்தால் குழந்தைப்பேறு பெற்றுள்ளதாக தோட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.
நவநாத சித்தர் சமாதி அடைந்த இடத்தில் ஒரு லிங்கம் தானாகவே தோன்றியதாகவும் அந்த லிங்கம் இன்றுவரை வளர்ந்து வருவதாகவும் மக்கள் நம்புகிறார்கள்.