(ஏறாவூர் நிருபர் நாஸர்) பாடசாலை அதிபர்களின் தலைமைத்துவப்பண்பு, முகாமைத்துவம் மற்றும் திறன்களை விருத்தி செய்யும் நோக்குடன் கல்வியமைச்சினால் ஒழுங்கு செய்யப்பட்ட ஒரு நாள் செயலமர்வு மட்டக்களப்பில் நடைபெற்றது. (27.04.2024)
கல்வியமைச்சின் முஸ்லிம் பாடசாலைகள் பிரிவின் வழிநடாத்தலில் நடைபெற்ற இச்செயலமர்வில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலுள்ள 78 முஸ்லிம் பாடசாலைகளின் அதிபர்களும் பங்கேற்றனர்.
கல்வியமைச்சின் முஸ்லிம் பாடசாலைகள் பிரிவின் பணிப்பாளர் மேஜர் என்ரீ. நசுமுதீன் தலைமையில் காத்தான்குடி மத்திய கல்லூரி மண்டபத்தில் நடைபெற்ற இச்செயலமர்வில் மட்டக்களப்பு மத்தி வலயக்கல்விப்பணிப்பாளர் எம்எம் ஜவாத் சிறப்பு விரிவுரையாற்றினார்.
தேசிய தகவல் முறைமையை ஏற்படுத்தல் என்ற தலைப்பில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் பொறியிலாளர் வினோத்ராஜ் விரிவுரையாற்றினார்.
மனித வள அபிவிருத்தியை ஏற்படுத்தல் என்ற தலைப்பில் ஆசிரிய வள நிலையத்தின் முகாமையாளர் ஏ. றியாஸ் விளக்கவுரையாற்றினார்.
மேலும் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் கல்வி அபிவிருத்திப்பிரிவின் பிரதிக்கல்விப்பணிப்பாளர் எம்எச்எம். றமீஸ் உள்ளிட்ட பலர் இங்கு விரிவுரையாற்றினர்.
அத்துடன் தகவல் தொழில் நுட்பம் தொடர்பாக செய்முறைப்பயிற்சிகளும் நடைபெற்றன.
பாடசாலை அதிபர்களின் ஆளுமைப்பண்புகள், நிருவாக முறைமை மற்றும் வினைத்திறனை மேம்படுத்துவதன் மூலமாக பாடசாலையின் அடைவு மட்டத்தை அதிகரிக்கச் செய்வது இத்திட்டத்தின் நோக்கமென தெரிவிக்கப்படுகிறது.