ஓர் ஆண்டில் மட்டும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 5000க்கு மேற்பட்ட மாணவர்கள் உயர்தரம் இல்லாமல் குந்தியிருக்கின்றனர்.

(படுவான் பாலகன்) மட்டக்களப்பு மாவட்டத்தினை அபிவிருத்தி செய்ய வேண்டுமென்றால் பிள்ளைகளின் கல்வித்தரத்தினை உயர்த்துவதற்கான திட்டங்களை தீட்டி, அதற்கான வளங்களைப் பெற்றுக்கொள்வதற்கு எதிர்கால எம்பிக்கள் முன்வர வேண்டும் என்பது கந்தசாமி போன்றோரின் எதிர்பார்ப்பு.
தமது எதிர்பார்ப்பு தொடர்பில்தான் கணபதியும், கந்தசாமியும் வவுணதீவு சந்தியில் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அரசாங்கத்தினால் வருடாந்தம் பொதுப்பரீட்சைகள் நடாத்தப்படுகின்றன. அப்பரீட்சைக்கு மாணவர்கள் தோற்றுகின்றனர். அவர்களில் ஒருசாரர் சித்தியடைகின்றவர்களாவும், இன்னொருசாரார் சித்தியடைய தவறுகின்றவர்களாவும் உள்ளனர். சித்தியடைகின்ற எல்லோருக்கும் அரச வேலை கிடைப்பதுமில்லை, சித்தியடையதாவர்கள் அனைவரும் வீட்டில் குந்தியிருப்பதுமில்லை. ஆனாலும், தற்கால நவீன வளர்ச்சியுடனான காலத்தில் கல்விப்பொதுத்தராதர சாதாரண தரத்திலாவது சித்தியடைந்திருக்க வேண்டும் என்பது பலரின் கருத்து. இதன்தேவையை பட்டறிவு பலருக்கு உணர்த்தியும் இருக்கின்றது.
எம்.பி பதவிக்காக, மட்டக்களப்பு மாவட்டத்தில் 304பேர் போட்டிபோடுகின்றனர். மாணவர்களின் கல்விக்கான வளங்களைப் பெற்றுக்கொடுக்க எத்தனைபேர்  செயற்படுகின்றனர்? என கணபதியிடம் வினவிய கந்தசாமி. கடந்த கால புள்ளிவிபரங்களையும் கூற ஆரம்பித்தான். இறுதியாக 2019ம் ஆண்டிற்கான பொதுப்பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியிருந்தன. இப்பரீட்சைப் பெறுபேற்றின் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து கல்விப்பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றிய 8044 மாணவர்களில் 4849மாணவர்கள் ஆறு பாடங்களில் சித்தியடைந்து உயர்தரம் கற்பதற்கு தகுதிபெற்றுள்ளனர். அதனடிப்படையில் 3195 மாணவர்கள் கடந்த வருடத்தில் சித்தியடைய தவறியிருக்கின்றனர். குறிப்பாக மட்டக்களப்பு கல்வி வலயத்தில் 833பேரும், கல்குடா கல்வி வலயத்தில் 637பேரும், பட்டிருப்பு கல்வி வலயத்தில் 591பேரும், மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் 428பேரும் சித்தியடைய தவறியிருக்கின்றனர். இவர்கள், கல்விப்பொதுத்தராதர சாதாரண தரம் சித்தியடையாதவர்களின் பட்டியலில் அடங்குகின்றனர். இவர்களின் எதிர்கால கல்வி தகைமை குறித்து வேதனையடைய வேண்டியிருக்கின்றது.
தரம் 1ல் பாடசாலைக்கு சேர்ந்த அனைவரும் கல்விப்பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றுவதில்லை. ஏன்னெனில், சில மாணவர்கள் பாடசாலைவிட்டு இடைவிலகி நிற்கின்றனர். இதற்கு பல்வேறு காரணங்களும் உள்ளன. மாணவர்கள் சிலர் இடைவிலக, பெரும்பாலனவர்கள் கல்விப்பொதுத்தராதரப்பரீட்சைக்கு தோற்றுகின்றனர். அவ்வாறு தோற்றுகின்ற அனைவரும் உயர்தரம்; கற்க செல்வதில்லை. குறிப்பிட்டளவிலானவர்களே உயர்தரம் கற்கின்றனர். அவ்வாறு கற்கின்றவர்கள் அனைவரும் பல்கலைக்கழக அனுமதிபெறுவதில்லை. குறிப்பாக மூன்று பாடங்களில் சித்தியடைவதில்லை. இது தொடர்பிலான கடந்த கால புள்ளிவிபரங்களை பார்க்கின்ற போது, 2016ம் ஆண்டு 8098 மாணவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து கல்விப்பொதுத்தராதர சாதாரணதரப்பரீட்சைக்கு தோற்றியிருக்கின்றனர். அவர்களில் 4708மாணவர்களே சித்தியடைந்திருக்கின்றனர். ஏனைய 3390மாணவர்களும் சித்தியடைய தவறியிருக்கின்றனர். இதில் மட்டக்களப்பு கல்வி வலயத்தில் இருந்து 957பேரும், கல்குடா கல்வி வலயத்தில் இருந்து 731பேரும், மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் 593பேரும், பட்டிருப்பு கல்வி வலயத்தில் 562பேரும், மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் இருந்து 547பேரும் சித்தியடைய தவறியிருக்கின்றனர். இதனடடிப்படையில் மட்டக்களப்பு  கல்வி வலயத்திலேயே அதிகமான மாணவர்கள் சித்தியடைய தவறியிருப்பதுடன், மட்டக்களப்பு மத்தி வலயத்திலிருந்து 1862பேர் தோற்றி, ஏனைய மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கல்வி வலயங்களை விட குறைந்தளவிலான மாணவர்களே சித்தியடைய தவறியிருக்கின்றனர். இத்தரவு தமிழர்களின் கல்வி அடைவு பின்தங்கி நிற்பதனை வெளிப்படுத்தி காட்டுகின்றது.
2016ம் சாதாரணதரதத்தில் சித்தியடைந்த அனைத்து மாணவர்களும் உயர்தரம் கற்க செல்லவில்லை என்பதையும் தரவுகள் சுட்டி நிற்கின்றன. 2016ல் 4708 மாணவர்கள் சித்தியடைந்திருந்தாலும், 2019ல் 4475மாணவர்களே உயர்தரத்திற்கு தோற்றியிருக்கின்றனர். 200க்கு மேற்பட்ட மாணவர்கள் சித்தியடைந்தும் உயர்தரத்திற்கு தோற்றாது இடைவிலகி இருகின்றனர். அவ்வாறு தோற்றியவர்களில், மட்டக்களப்பு மாவட்டத்தில் 2738மாணவர்களே மூன்று பாடங்களிலும் சித்தியடைந்து பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளனர். இத்தரவின் அடிப்படையில் 1737மாணவர்கள் உயர்தரம் சித்தியடையாத பட்டியலில் அடங்குகின்றனர். (இரண்டாம் தரம் தோற்றி சித்தியடைகின்றவர்களும் உள்ளனர்). ஒட்டுமொத்தத்தில் பார்க்கின்ற போது, மட்டக்களப்பு மாவட்டத்தில் 2016ல், 8098 மாணவர்கள் சாதாரணதரத்திற்கு தோற்றியிருந்தாலும், 2738 மாணவர்களே 2019ல் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதிபெற்றவர்களாகின்றனர். ஏனைய 5360 மாணவர்களும் உயர்தர சி;த்தி இல்லாமலே உள்ளனர். அண்ணளவாக மாவட்டத்தில் 65வீதத்திற்கும் அதிகமானவர்கள் உயர்தரம் சித்தியடையாத பட்டியலில் உள்ளடங்குகின்றனர். இது கவலைக்குரியதே.
அவ்வாறு உயர்தரம் கற்று சித்தியடைந்த பின்னர், பல்கலைக்கழகம், கல்வியல் கல்லூரி, உயர்தொழிநுட்ப கல்லூரிகள், ஏனைய தொழிற்பயிற்சி கல்வி நிலையங்கள் என சென்று தமது, கல்வித்தகைமைகளையும், தொழில் தகைமையையும் விருத்தி செய்கின்றனர் என ஆராய்ந்து பார்த்தால் 10வீதமானவர்களே இதற்குள் அடங்கக்கூடும். இது மாவட்டத்தின் கல்வி அபிவிருத்திப் போக்கில் மிக மோசமான நிலையென்றே கூற முடியும். எனக்குறிப்பிட்ட கந்தசாமி, வருங்கால எம்பிக்கள், எம்பிக்களாக உருவாக நினைப்பவர்கள் அனைவரும் இணைந்து மாவட்டத்தின் கல்வி நிலையை உயர்த்துவதற்கான விசேட செயற்றிட்டங்களை வகுத்து, அதற்கான வளங்களைப் பெற்றுக்கொடுப்பதற்கு முன்வர வேண்டும் எனக்கூறியவனாக அவ்விடத்தில் இருந்து இருவரும் நகர்ந்து கொண்டனர்.