நாவிதன்வெளியில், இழப்பீடுகளுக்கான அலுவலகத்தினால் வாழ்வாதார உதவிகள் வழங்கிவைப்பு

(ஏ.எல்.எம்.ஷினாஸ்)

நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியல் மறுசீரமைப்பு அமைச்சின் இழப்பீடுகளுக்கான அலுவலகம் அம்பாறை மாவட்ட செயலகத்துடன் இணைந்து “நம்பிக்கைக்கான நூல்” மற்றும் “வாழ்க்கைக்கான வெளிச்சம்” திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்த வாழ்வாதார உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கி வைக்கும் நிகழ்வு நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் (19) நடைபெற்றது.

பிரதேச செயலாளர் ஆர். ராகுலநாயகியின் வழிகாட்டலுக்கு அமைய உதவி பிரதேச செயலாளர் பி. பிரணவரூபன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், நீதி அமைச்சின் இழப்பீடுகளுக்கான பணிப்பாளர் அனுராதி பெரேரா, பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி கிருபைராஜா திலகராணி, மாவட்ட இழப்பீட்டிற்கான உத்தியோகத்தர் எம்.ஆர். ஆஸாத் உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் போது, கைத்தறி நெசவு உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் நெசவு உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்கள் மற்றும் பயிற்சிகள் வழங்கப்பட்டதுடன் மெழுகுவர்த்தி உற்பத்தி செய்வதற்காக தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு பயிற்சிகள் மற்றும் உற்பத்தி இயந்திரங்கள் என்பனவும் வழங்கிவைக்கப்பட்டன.