பாடசாலை சிற்றுண்டிகளில் பாரம்பரிய உணவு வேண்டும்

எமது முன்னோரின் பாராம்பரிய உணவு முறைகள் எமது கைநழுவிச் செல்லும் இக்காலத்தில் இது மறைந்து போகாமல் இருப்பதற்கு எதிர்கால சந்ததினருக்கு உணர்த்த பாடசாலை சிற்றுண்டிச் சாலைகளில் பாரம்பரிய உணவுகளையே விற்பனை செய்ய வேண்டும் என கல்விப் பணிப்பாளர்கள் அதிபர்களிடம் வேண்டுகோள் விடஉள்ளதாக மன்னார் அரசாங்க அதிபர் அ.ஸ்ரான்லி டிமெல் இவ்வாறு தெரிவித்தார்.

அவுஸ்ரேலியா எயிட் நிதியுதவியுடன் மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பெண்களின் மரபுசார் உணவுக் கொண்டாட்டம் நேற்று மன்னார் நகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது.இதன்போதே மன்னார் அரசாங்க அதிபர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது உரையாற்றிய அவர் ,

இங்கு வைக்கப்பட்டிருக்கும் பாரம்பரிய உணவுகளைப் பார்க்கின்றபோது இவைகள் எமது கண்ணுக்கும் காதுக்கும் நாவுக்கும் விருந்தளிக்கும் ஒரு உண்ணதமான நிகழ்வாகும்.மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியத்தின் இணைப்பாளர் மகாலட்சுமி அவர்கள் தற்பொழுது பெண்களை உள ரீதியாக வலுப்படுத்தலில் தனது கவனத்தை செலுத்தி வருகின்றார் என்பதை நான் நீண்ட நாட்களாக கவனித்து வருகின்றேன்.

அத்துடன் பெண்கள் சுயதொழிலில் தங்கள் காலில் நிற்க வேண்டும் என்ற ஒரு தூரநோக்குடன் செயல்பட்டு வருகின்றார்.
உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் மனம் ஆரோக்கியமாக இருக்கும் என்ற சிந்தனையிலேயே அவரின் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அன்மையில் இவ்வாறான நிகழ்வு இலுப்பைக்கடவையில் நடைபெற்றது. இன்று இது மன்னாரில் நடாத்தப்படுகின்றது.இந்த நிகழ்வு காலத்துக்கு ஏற்ற ஒரு நிகழ்வாக இருக்கின்றது. உணவே மருந்து என்ற காலம் மாறி இப்பொழுது மருந்தே உணவு என்ற நிலையாக மாற்றம் அடைந்துள்ளது.நாற்பது வயது கடந்து விட்டால் கட்டாயம் எமது உடலை பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்பது இப்பொழுது வைத்தியர்களின் ஆலோசனைகள்.

ஏனென்றால் இன்றைய உணவு பழக்கமே இந்த நிலைக்கு தள்ளியுள்ளது. கொரோனா வந்த பின்புதான் பலர் பாராம்பரிய மருந்துக்கு திரும்பினர் என்பது நாம் அறிவோம்.தென் பகுதியில் காலையில் இலைக்கஞ்சி விற்கின்றார்கள். இங்கு மன்னாரில் இதற்கான பொருட்கள் இருக்கின்றன. ஆனால் இதை இங்கு செய்வதில் எவரும் அக்கறைக் கொள்வதில்லை.எமது பகுதியில் உற்பத்தி செய்யப்படும் உடலுக்கு தீங்கு விளைவிக்காத உணவு மற்றும் பானங்கள் வெளிநாடுகளுக்குக் கொண்டு சென்று அங்குள்ள மக்கள் அதில் ஆர்வம் கொண்டு பாவிக்கின்றனர்.

ஆனால் நாம் அங்கிருந்து இங்கு வரும் உடலுக்கு கேடான பொருட்களையே வாங்கி பருகின்றோம் உண்ணுகின்றோம். இயற்கையாக கிடைக்கும் பொருட்களை நாம் விட்டுவிட்டு காசைக் கொடுத்து நோயை வாங்கும் சமூகமாகவே இருக்கின்றோம்.
இதை மாற்றும் நிகழ்வாகவே இந்த நிகழ்ச்சி அமைகின்றது. இதை நாம் மக்கள் மத்தியில் தொடர்ந்து கொண்டு செல்ல வேண்டும்.
எதிர்காலத்த்pல் இங்கு நடக்கும் நிகழ்வுகளில் சோடா பானங்கள் பரிமாறுவதை விட்டு இவ்வாறான உடலுக்கு நன்மை பயக்கும் பானங்களை பரிமாற வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.எமது முன்னோரின் பாரமபரிய உணவு முறைகள் எமது கைநழுவி செல்லுகின்ற வேளையில் இது மீண்டும் எழுச்சிப்பெற எதிர்கால சந்ததினருக்கு கொண்டுச் செல்லப்பட வேண்டும்.

எதிர்காலத்தில் பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளில் எமது பாரம்பரிய உணவு வகைகளையே விற்பனை செய்யப்படல் வேண்டும் என்று நான் வலயக் கல்விப் பனிப்பாளர்கள் அதிபர்களிடம் வேண்டுகோள் விட இருக்கின்றேன்.இவ்வாறு இவை நடைமுறைக்கு வருமாகில் மாணவர்கள் ஆரோக்கியமான பிள்ளைகளாக வளரும் என்பது ஐயமில்லை.இவ்வாறான நிகழ்வு எமது மாவட்டத்தில் ஒவ்வொரு பிரதேசங்களுக்கும் கொண்டு செல்லப்பட வேண்டும் என இவ்வாறு கேட்டுக் கொண்டார்.