கல்முனையில் கடற்கரை சுத்திகரிப்பு

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் பணிப்புரைக்கு அமைய கிழக்கு மாகாணத்தின் கரையோரப் பிரதேசங்களை தூய்மையான பிரதேசங்களாக மாற்றும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் கல்முனை கடற்கரை பிரதேசத்தை தூய்மைப்படுத்தும் பணிகள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டன.

கல்முனை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸின் ஒத்துழைப்போடு கல்முனை மாநகர சபை ஆணையாளர் ஏ.ஆர்.எம். அஸ்மியின் வழிகாட்டலுடன் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இன்றைய தினம் கல்முனை வாடிவீட்டு கடற்கரையை அண்டிய பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட தூய்மைப்படுத்தும் பணிகள் சாய்ந்தமருது, மருதமுனை, பெரியநீலாவணை மற்றும் பாண்டிருப்பு கடற்கரை பகுதிகள் வரை சுத்தம் செய்யப்பட்டன இதன் போது நீண்ட காலமாக காணப்பட்ட புற்காடுகள் வெட்டி அகற்றப்பட்டதுடன் கடற்கரை பகுதிகளில் காணப்பட்ட குப்பைகளும் அகற்றப்பட்டன. கடற்கரை மணல் மேடுகள் கனரக இயந்திரங்கள் கொண்டு சமப்படுத்தப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்டன.

மாநகர சபையின் உதவி ஆணையாளர் ஏ.எஸ்.எம்.அஸீம்; பொறியியலாளர் ஏ.ஜே.எச்.ஜௌஸி, வேலைகள் அத்தியட்சகர் வி.உதயகுமரன் ஆகியோரது பங்குபற்றுதலோடு தூய்மைப்படுத்தல் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

நகரையும் சுற்றுச்சூழலையும் தூய்மையாகவும் அழகாகவும் வைத்திருப்பதன் ஊடாக சுற்றுலாப் பயணிகளை கவரும் நகராகவும் டெங்கு அற்ற பிரதேசமாகவும் கல்முனை மாநகரை மாற்ற முடியும். கடற்கரைப் பகுதிகளிலும் பிரதான வீதிகள் உள்ளிட்ட பொது இடங்களிலும் முன்னுரிமை அடிப்படையில் தொடர்ந்தேச்சியாக கழிவுகளை அகற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று உதவி ஆணையாளர் ஏ.எஸ்.எம்.அஸீம் இங்கு தெரிவித்தார்.