இடைக்கால அரசாங்கம் குறித்து ஜே.வி.பி.இன் அறிவிப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கீழ் இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கான எந்தவொரு யோசனையையும் நிராகரிப்பதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

அத்தகைய பிரேரணைகளுக்கு ஜே.வி.பி ஒருபோதும் உடன்படாது என ஜே.வி.பியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டுமென்பது பொதுமக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளான போதிலும், ஜனாதிபதி அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள ஆர்வமாக இருப்பதாக தெரிவித்தார்.

நாட்டின் ஸ்திரத்தன்மை மேலும் சீர்குலைந்தாலும், பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளானாலும், ஆட்சி கவிழ்ந்தாலும், கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சியைப் பிடிக்கப் பார்க்கிறார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த அரசாங்கத்தினால் முழு நாடும் பொதுமக்களும் பாரிய இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்ள போதிலும் தமது அதிகாரத்தை உறுதிப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் திஸாநாயக்க தெரிவித்தார்.

உடன்பிறப்புகள் மற்றும் மகன்களைக் கொண்ட இந்த ஆட்சி நாட்டு மக்களால் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்றும் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றி தேசத்தை கட்டியெழுப்புவதில் அரசாங்கம் திராணியற்றது என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் மூலம் ஜனாதிபதியும் அவரது அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தின் கீழ் இடைக்கால அரசாங்கத்தை நிறுவி அதன் பின்னர் தேர்தலை நடத்துவது அத்தியாவசியமானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மக்களின் ஆசியுடன் புதிய அரசாங்கத்தை அமைப்பதன் மூலமே தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் பதவி விலகாவிட்டால் மக்கள் சக்தியை பயன்படுத்தி நிலைமையை தீர்க்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.