சம்மாந்துறையில் கொக்கைன் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

(ஏ.எல்.எம்.ஷினாஸ்)

அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கொக்கைன் போதைப் பொருளை கடத்திச் சென்ற 22 வயதுடைய இளைஞர் விசேட அதிரடிப்படையினரால் இன்று (15) கை காட்டி சந்தியில் வைத்து கைது செய்யப்பட்டார்.

பெரியநீலாவணை விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, குறித்த பகுதிக்கு விரைந்த அதிரடிப்படையினர் சூட்சுமமான முறையில், குறித்த நபரை கைது செய்தனர்.

விற்பனைக்காக கொண்டு செல்ல முற்பட்ட 5 கிராம் 860 மில்லி கிராம் கொக்கைன் போதைப்பொருள் இவரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த இளைஞன் நீண்ட காலமாக போதைப்பொருள் கடத்திச் சென்று விற்பனையில் ஈடுபட்டு வரும் ஒருவர் என படையினர் தெரிவிக்கின்றனர்.

விசேட அதிரடிப் படையினரின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர, அம்பாறை வலயக்கட்டளை அதிகாரி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜே.ஆர் சேனாதிரா ஆகியோரது அறிவுறுத்தலுக்கமைய மாவட்ட கட்டளை அதிகாரி டி.சி வேவிடவிதான வழிகாட்டலில் பெரியநீலாவணை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி ஆர்.ஏ.சி.டி.ஏ ரத்நாயக்க, எஸ்.எம்.பி.பி.எம். டயஸ் (IP) தலைமையிலான விசேட அதிரடிப்படையினர் இந்த சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர் .

மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.