ரணிலை கள்ளர், சூழ்ச்சிக்காரர், பொதுமக்களின் சொத்துக்களை கொள்ளையடித்தவர் என பிரசாரம் செய்து ஆட்சியமைத்த ராஜபக்ஷவினர் இன்று ரணிலையே பிரதமராக்கி ஆட்சி செய்வது மிக்க கீழ்த்தரமான அரசியல் கலாசாரமாகும், எனவே ரணில், ராஜபக்ஷ இருவரையும் தோற்கடிக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
கோட்டாபய ராஜபக்ஷவின் குற்றங்களுக்கு எதிராக, கொலைகள், ஆட்கடத்தல்கள் மற்றும் மோசடிகளுக்கு எதிராக ரணிலால் செயற்பட முடியுமா எனவும் கேள்வி எழுப்பினார்.
கொழும்பில் நேற்று(13) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை கூறியிருந்தார். அவர் மேலும் கூறுகையில்,
இப்போது அமையப்பெற்றுள்ள அரசாங்கமானது கோட்டாபய ராஜபக்ஷவினதும், ரணில் விக்கிரமசிங்கவினதும் கபடத்தனமான செயற்பாட்டால் உருவாக்கப்பட்டதாகும். பாராளுமன்றத்திற்கு தெரிவாவதற்கு கூட மக்கள் ஆணையை பெற்றுக்கொள்ள முடியாத அவரால் நாட்டை ஆட்சிசெய்ய முடியாது என்றார்.
நீண்ட நாட்களுக்கு முன்னரே ரணில் விக்கிரமசிங்கவை மக்கள் புறக்கணித்துவிட்டனர். அதேபோல் தனக்கு வாக்களித்த சகல தரப்பினாலும் நிராகரிக்கப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷ, ரணிலுடன் இணைந்து ஆட்சியை கொண்டு நடத்துவதானது எந்தவொரு ஜனநாயக அடிப்படையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகும்.
அதுமட்டுமல்ல, 2018ஆம் ஆண்டு சூழ்ச்சியின் மூலமாக அரசாங்கத்தை கைப்பற்றியமைக்கு ஒப்பாகவே இப்போதும் அரசாங்கமொன்றை உருவாக்கியுள்ளனர். அப்போது எதிரணியில் இருந்தவர்களை கொண்டு அரசாங்கத்தை அமைத்ததை போலவே இப்போதும் எதிர் முகாமில் உள்ள ஒருவருக்கு பிரதமர் பதவியை கொடுத்து அரசாங்கமொன்றை அமைத்துள்ளனர். ஆகவே ஜனாதிபதிக்கு வழங்கிய ஒட்டுமொத்த மக்கள் ஆணையையும் மீறியே இப்போது அவர் தீர்மானம் எடுத்துள்ளார்.