மாவீரரை வைத்து தேவையற்ற அரசியலை நடத்த வேண்டாம். சில அரசியற் கட்சிகள் மாவீரர் நிகழ்வுகளை தாங்கள் தான் நடத்துவதாக உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பரப்புரை செய்கின்றார்கள். குறித்த கட்சிகள் தயவு செய்து இவ்வாறான பரப்புரைகளைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என தரவை மாவீரர் துயிலுமில்ல மாவீரர் தின ஏற்பாட்டுக் குழுவின் உபதலைவர் பூ.மயில்வாகனம் தெரிவித்தார்.
இன்றைய தினம் தரவை துயிலுமில்லத்தில் முன்னெடுக்கப்பட்ட துப்பரவுப் பணிகளின் பின்னர் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தரவை துயிலுமில்ல மாவீரர் நிகழ்வு ஏற்பாட்டுக் குழுவினால் எதிர்வரும் மாவீரர் தின அனுஸ்டிப்புக்கான சகல ஏற்பாடுகளும் தற்போது பூர்த்தி செய்யப்பட்டுள்ள நிலையில் துயிலுமில்ல வளாகம் துப்பரவு செய்யும் பணிகள் ஏற்பாட்டுக் குழுவினாலும், பொதுமக்களாலும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எதிர்வரும் நாட்களிலும் இடம்பெறவுள்ள துப்பரவு பணிகளிலும் பொதுமக்கள் அனைவரும் வருகை தந்து தங்கள் ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.
இந்த நிகழ்வுகளை சில அரசியற் கட்சிகள் தாங்கள் தான் நடத்துவதாக உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பரப்புரை செய்கின்றார்கள். குறித்த கட்சிகள் தயவு செய்து இவ்வாறான பரப்புரைகளைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம். எமது மாவீரர்களுக்கான நிகழ்வினை எவ்வித கட்சி பேதமுமின்றி மக்களால் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதற்காகவே குறித்த பகுதியைச் சேர்ந்த மக்கள் இணைந்து மாவீரர் தின ஏற்பாட்டுக் குழு என்ற ஒன்றை உருவாக்கி அதன் மூலம் இந்த நிகழ்வினை முன்னெடுத்து வருகின்றோம்.
யாராக இருந்தாலும் கட்சி பேதம் கடந்து இந்தக் குழுவுடன் இணைந்து எமது மாவீரர்களுக்கான இந்த அஞ்சலியை சிறப்பாக மேற்கொள்ள முடியும். இவர், அவர் வரக்கூடாது என்று சொலý;லி சண்டை பிடிக்கும் இடம் இதுவல்ல. எமக்காக உயிரைத் தியாகம் செய்த வீரமறவர்கள் துயிலும் புனித பூமி இது. இதற்குரிய கௌரவத்தை நாங்கள் வழங்க வேண்டும்.
எனவே இங்கு மக்களால் தெரிவு செய்யப்பட்ட நிகழ்வு எற்பாட்டுக் குழுவொன்று இருப்பதென்பது அனைவரும் அறிந்த விடயம். அவ்வாறு அறியாதவர்கள் இருப்பின் இதனை அறிந்து செயற்பட வேண்டும். இதனை நாங்கள் வருடா வருடம் இந்த ஏற்பாட்டுக் குழுவின மூலமே மேற்கொண்டு வருகின்றோம் என்பதும் சகலரும் அறிந்த விடயம்.
ஆனால், சில அரசியல்வாதிகள் தங்கள் அரசியல் நலனுக்காக இங்கு வருவதும், புகைப்படங்கள் எடுப்பதும், மக்களால் துப்பரவு செய்து குவிக்கப்பட்ட குப்பைகளுக்கு நெருப்பு வைத்துவிட்டு தாங்கள் துப்பரவு செய்வதாகப் புகைப்படம் எடுப்பதுவுமாக இருக்கின்றனர். இந்த தேவையற்ற அரசியலை மாவீரரை வைத்து நடத்த வேண்டாம். உங்கள் அரசியலை இந்த தரவை துயிலுமில்லத்தில் காட்ட வேண்டாம் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம் என்று தெரிவித்தார்.


