இனங்களுக்கிடையில் இனவாதத்தை தூண்டும் NPPஅரசு சாணக்கியன் அதிருப்தி!

நேற்றைய தினம் திருகோணமலையில் இனங்களுக்கிடையில் முரண்பாட்டை தோற்றுவிக்கும் ஒரு துரதிஷ்டவசமான சம்பவமொன்றினை கண்களினூடாக பார்க்க முடிந்தது.

முன்பதாக பேசிய அமைச்சர் தயசிறி ஜயசேகர அவர்களுக்கு ஒரு எச்சரிக்கையை விடுக்கின்றேன். நீங்கள் அரசியல் செய்வதற்காக சட்ட விரோதமான செயற்பாடுகளை அனுமதிக்க கூடாது. எதிர்க்கட்சி தலைவரும் “அரசியலமைப்பிலே பௌத்த இடத்திற்கு முதலிடம் வழங்கப்பட்டுள்ளது” என கூறினார். பௌத்த மதமோ எந்த மதத்தினதும் சட்ட விரோத செயல்களுக்கு அனுமதியளிக்கக் கூடாது. அது நானாக இருந்தாலும் சரி, பௌத்த மதத் துறவியாக இருந்தாலும் சரி.

நேற்றைய தினம் திருகோணமலைக் கடற்கரையிலே சட்டவிரோதமாக புதிய விகாரையொன்று உருவெடுத்தது. நான் அறிந்த வகையில் நண்பர் அருண் ஹேமச்சந்திரா அவர்களும் இவ் விடயம் தொடர்பில் கரிசனையுடன் இருந்தார்.

நாங்கள் கோட்டாபய மற்றும் ராஜபக்ச அரசாங்கங்களில் நடைபெற்ற சட்டவிரோத இனவாதச் செயல்கள் தற்போதைய அரசாங்கத்திலே நிகழாது என எதிர்பார்த்தோம். ஆனால் நேற்றைய தினம் திருகோணமலையில் விகாரை அமைக்கப்படுவதற்கு எதிராக கரையோர பாதுகாப்பு பிரிவினை சேர்ந்தவர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை மேற்கொண்டமைக்கு இணங்க பொலிஸார் இவ் விடயம் சட்ட விரோதமானது எனக் கருதி நிறுத்துவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அன்றைய தினம் இரவு 8 மணியளவில் புத்தர் சிலை அவ்விடத்தில் பொலிஸாரின் உதவியுடன் தாபிக்கப்பட்டது.

இச் சட்ட விரோத செயலை தடுத்து நிறுத்த முனைந்த திருகோணமலை NPP அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா அவர்களும் ஒருவர் என்பதை இவ்விடத்தில் கூறிக்கொள்கின்றேன். இதன் பிறகே நான் கௌரவ அமைச்சர் ஆனந்த விஜயபால அவர்களை தொடர்பு கொண்டு “இது ஒரு இனவாத செயற்பாடு; எதிர்காலத்தில் இன, மதங்களுக்குள் ஒரு முரண்பாட்டினை தோற்றுவிக்கும் விடயம், இதிலே நீங்கள் கவனமெடுக்க வேண்டும்” என தெரிவித்தேன்.

இரவு 11 மணியளவிலே புத்தர் சிலை அகற்றப்பட்டது. அதன் நிமித்தம் இன்று காலையில் தேசிய மக்கள் சக்தியின் செயற்பாட்டை வரவேற்றேன். ஆனால் மீண்டும் கௌரவ அமைச்சர் “இச் சிலையை பாதுகாப்பதற்காகவே நாங்கள் அதனை வெளியில் எடுத்துச் சென்றோம்” எனக் கூறினார். அமைச்சரின் இக் கருத்தை நான் வன்மையாக கண்டிக்கிறேன். 30 வருட கால யுத்தம் நடைபெற்ற போது விடுதலைப் புலிகளால் பௌத்த மதச் சின்னங்கள் சேதப்படுத்தப்படவில்லை. தமிழ் மக்கள் இரவோடு இரவாக சென்று சிலைகளை உடைப்பவர்கள் அல்லர் நாம் இனங்களையும் மதங்களையும் மதிப்பவர்கள். சட்ட விரோத செயல்களுக்கு எதிராக குரல் கொடுக்குமே தவிர எம் தமிழ் இனம் வன்முறைகளில் ஈடுபட்டு சிலைகளை அழிக்கும் செயலில் ஒரு போதும் ஈடுபடாது.

இந்த இராணுவம் கூட மயிலிட்டி பிரதேசத்தில் பலாலி விமான நிலையத்தில் இராணுவ கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் கத்தோலிக்க தேவாலயத்தினை தகர்த்துள்ளது.
அருண் ஹேமச்சந்திரா அவர்களே எமது கட்சியுடன் இணைந்து கொள்ளுங்கள். ஏனெனில் இந்த கட்சி உங்களுக்கு பொருந்தாது. நானும் கடந்த காலத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் இருந்த போது அக் கட்சியின் இனவாத செயற்பாடுகள் இவ்வாறே இருக்கும். தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்று அமைச்சராகிய உங்களின் சங்கட மனநிலை எனக்கு புரியும். மனசாட்சியின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி செய்த இவ் விடயம் பிழையானது என ஏற்றுக் கொள்ளுங்கள்.