உலகளாவிய தொழில் முனைவோர் வாரம் 2025 மட்டக்களப்பு!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

உலகளாவிய தொழில் முனைவோர் வாரம் 2025 இன் பிரதான நிகழ்வு இன்று காலை நாடு பூராகவும் பிரதமரின் தலைமையில் ஒரே தடவையில் நேரடி ஒளிபரப்பாக ஆரம்பிக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பிரதான நிகழ்வு பழைய மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் தலைமையில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின் மாவட்ட மேற்பார்வை உத்தியோகத்தர் சி.விநோத் அவர்களது ஒருங்கிணைப்பில் இடம் பெற்ற நிகழ்வில் மாவட்ட செயலக மேலதிக மாவட்ட செயலாளர் திருமதி.சுதர்ஷனி ஸ்ரீகாந்த், மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் என்.தனஞ்ஜெயன் உள்ளிட்ட மாவட்ட செயலக உயரதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

தொழில் முனைவோருக்கான சந்தை வசதி, பொருளாதார ஏற்றுமதி வழிகாட்டல்கள், 200 நாடுகளில் இருக்கும் முதலீட்டாளர்களுடன் இணைப்பை ஏற்படுத்தல் போன்ற விடையங்களை நடைமுறைப்படுத்தும் நோக்கிலேயே ஒரு வார காலத்திற்கு குறித்த திட்டத்தினை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளது.

14 பிரதேச செயலக பிரிவுகளில் இருக்கும் தொழில் முனைவோரது பங்களிப்புடன் விற்பனைக் கண்காட்சியும் இதன் போது பழைய மாவட்ட செயலக வளாகத்தில் மாவட்ட அரசாங்க அதிபரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன், தொழில் முனைவோருக்கான முயற்சியாண்மை விழிப்புணர்வு கருத்தரங்கும் இடம் பெற்றது.

இதன் போது சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவு (SED), தேசிய தொழில் முயற்சி அதிகார சபை (NEDA), ஏற்றுமதி அபிவிருத்தி அதிகார சபை (EDB), விதாதா (VIDATHA), பிராந்திய புடவை கைத்தொழில் திணைக்களம் ஆகியவற்றின் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.