மாகாணசபை முறைமை திருத்தத்தை பத்து நிமிடத்தில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றக் கூடிய பலத்தில் அரசாங்கம்!

மாகாணசபை முறைமை தொடர்பில் சிறியதொரு திருத்தத்தினை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவது தற்போதைய அரசாங்கத்திற்குச் சின்னதொரு விடயம். மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் இருக்கின்றது. பத்து நிமிடத்தில் பாராளுமன்றத்தில் தீர்மானத்தை எடுத்து நடைமுறைப்படுத்த முடியும். மாகாணசபைத் தேர்தலை நடத்தாது இழுத்தடிக்குமாக இருந்தால் வடக்கு கிழக்கு மக்களுக்குத் துரோகம் செய்யும் கட்சியாகவும், மக்கள் கைகளில் அதிகாரம் செல்வதை விரும்பாத ஒரு கட்சியாகவும் தேசிய மக்கள் சக்தி இருக்கும் என கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினரும், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் சிரேஸ்ட தலைவருமான இரா.துரைரெட்ணம் தெரிவித்தார்.

இன்றைய தினம் மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மாகாணசபை முறைமை என்ற விடயத்திலும் பலருக்குப் பல குழப்பங்கள் இருக்கின்றன. இந்த மாகாணசபை முறைமை என்பது மக்களின் காலடிக்கு அதிகாரங்களைக் கொண்டு செல்லுகின்ற விடயம். இது விடுதலைப் புலிகளுக்கோ, தமிழரசுக் கட்சிக்கோ, ஈழமக்கள் விடுதலை முன்னணிக்கோ கொடுக்கப்படுகின்ற அதிகாரம் அல்ல. அந்த கட்சிகளும் அதிகாரங்களைக் கோரவில்லை. அவை கேட்பது மக்களுக்கு இலகுவாக அதிகாரங்கள் கொண்டு செல்லப்பட வேண்டும் என்பதையே.

கடந்த இருபத்தைந்து முப்பது வருட காலமாக இலங்கையில் அனைத்து பாகங்களிலும் மாகாணசபை முறைமையூடாக நியதிச் சட்டங்கள் உருவாக்கப்பட்டு அதிகாரங்கள் மக்கள் காலடிக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளமை வரலாறாகும்.

ஆனால் துரதிஸ்டவசமாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் வெறுமனே ஐந்து நியதிச் சட்டங்களே உருவாக்கப்பட்டுள்ளன. வடமத்திய, மேல் மாகாணங்களை எடுத்துக் கொண்டால் சுமார் 80க்கும் மேல் நியதிச் சட்டங்களை உருவாக்கியுள்ளன.

அதிகமான நியதிச் சட்டங்கள் உருவாக்கப்படும் போது தாமாகவே அந்த அதிகாரங்கள் மக்கள் வசம் பரவலாக்கப்படும். எனவே மக்களுக்கு அதிகாரம் தேவை என்றால் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

ஆனால், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் தமிழர்களைப் போன்று கடந்த காலங்களில் ஆயுதம் ஏந்திப் போராடிய கட்சி என்ற ரீதியில் தமிழ் மக்களின் உணர்வுகளையும், ஜனநாயகத்தையும், தமிழ்த் தேசியத்தையும், தமிழர் உரிமை தொடர்பான விடயங்களையும் ஏற்றுக் கொண்ட கட்சியாக இருந்தால் குறைந்த பட்சம் மாகாணசபை முறைமையூடாகவாவது தமிழ் மக்களுக்கான அரசியல் அதிகாரத்தை அமுல்ப்படுத்த முன்வர வேண்டும்.

இது அரசியல் யாப்பில் உள்ளடக்கப்பட்ட ஒரு விடயம். இதில் புதிதாகக் கொண்டு வருவதற்குரிய தேவை இல்லை. இதனை அமுல்ப்படுத்துவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

இன்று சொல்லுகின்றார்கள் அடுத்த வருடம் பழைய முறைமையில் தேர்தல் நடத்தப்படும் என்று. அதற்கு சிறியதொரு திருத்தத்தினை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவது தற்போதைய அரசாங்கத்திற்குச் சின்னதொரு விடயம். மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் இருக்கின்றது. பத்து நிமிடத்தில் பாராளுமன்றத்தில் தீர்மானத்தை எடுத்து நடைமுறைப்படுத்த முடியும். மாகாணசபைத் தேர்தலை நடத்தாது இழுத்தடிக்குமாக இருந்தால் வடக்கு கிழக்கு மக்களுக்குத் துரோகம் செய்யும் கட்சியாகவும், மக்கள் கைகளில் அதிகாரம் செல்வதை விரும்பாத ஒரு கட்சியாகவும் தேசிய மக்கள் சக்தி இருக்கும்.

நல்லாட்சி முறைமைக்கான தலைமைத்துவம், ஊழல் ஒழிப்பு, மோசடி இல்லாத நிருவாகம், போதைவஸ்துக்கு எதிரான விடயங்கள் என்று சொல்லும் உங்களின் நல்ல முகத்தைப் பார்ப்பதானால் பாராளுமன்றத்தில் திருத்தத்தைக் கொண்டு வந்து அடுத்த வருடத்தில் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுப்பீர்கள் என நம்புகின்றோன்.