எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ் அருள்ராஜ் அவர்களின் ஆலோசனை மற்றும் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் வழிகாட்டுதலின் கீழ் உதவி மாவட்ட செயலாளர் ஜீ.பிரணவன் மேற்பார்வையின் கீழ் கல்குடா கல்வி வலயத்திற்குற்பட்ட வடமுனை அரசினர் தமிழ் பாடசாலையின் அதிபர் பிரணவன் தலைமையில் சர்வதேச சிறுவர் தின நிகழ்வுகள் நேற்று (23) அரசினர் தமிழ் பாடசாலை வளாகத்தில் இடம் பெற்றன.
சர்வதேச சிறுவர் தின நிகழ்வுகளானது இம்முறை “உலகை நாடாத்த அன்பால் போஷியுங்கள்” எனும் தொனிப்பொருளில் சர்வதே சிறுவர் தின நிகழ்வுகள் நாடளாவிய ரீதியில் இடம் பெற்று வருகின்றது.
இதனை முன்னிட்டு மாவட்ட செயலகமானது கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலக பிரிவினில் அமைந்துள்ள ஊத்துச்சேனை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களையும், வடமுனை அரசினர் தமிழ் பாடசாலை மாணவர்களை விழிப்புணர்வுட்டும் முகமாக சர்வதேச சிறுவர் தின நிகழ்வுகள் இடம் பெற்றன.
இதன் போது இப்பிரதேசத்தில் காணப்படும் சவால்கள் தொடர்பாக ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்களிடம் கருத்துக்கள் பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதன் போது சிறார்களின் ஆளுமையை வெளிக்காட்டும் முகமாக பல நிகழ்வுள் இடம் பெற்றதுடன் பங்கு பற்றிய மாணவர்களுக்கு அதிகாரிகளினால் பரிசில்கள் வழங்கி வைத்தனர்.
இந் நிகழ்வில் வீரநகர் தமிழ் கலவன் பாடசாலை அதிபர், சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் ரீ.மதிராஜ், மாவட்ட முன்பிள்ளைப்பருவ இணைப்பாளர் வி.முரளிதரன், மாவட்ட மகளிர் அபிவிருத்தி இணைப்பாளர், மாவட்ட உளவள துணை இணைப்பாளர்கள், மாவட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர், மாவட்ட கலாசார உத்தியோகத்தர்கள், கிரான் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது ஊத்துச்சேனை கிருபை முன்பள்ளி பாலர் பாடசாலை சிறார்கள் மற்றும் வடமுனை சமாதான பாலர் பாடசாலை சிறார்களுக்கு மகிழ்வூட்டும் வகையில் நிகழ்வுகள் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.


