எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட தொழில் முயற்சியாளர்களை வலுவூட்டும் முயற்சியாண்மை அபிவிருத்தி பயிற்சி நெறியானது (EDP) சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் பணிப்பாளரின் வழிகாட்டுதலின் கீழ் நாடளாவிய ரீதியில் இடம் பெற்று வருகின்றன.
.இதன் ஓர் அங்கமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம் பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் மேற்பார்வையின் கீழ் சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின் மாவட்ட மேற்பார்வை உத்தியோகத்தர் சி.விநோத் ஒருங்கிணைப்பில் மாவட்டத்தில் சிறு தொழில் முனைபவர்களுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டன.
தொழில் முனைவோருக்கான ஆளுமை விருத்தி, முயற்சியாண்மை அபிவிருத்தி, இலத்திரனியல் சந்தை வழிகாட்டுதல் மற்றும் சிறு தொழில் தொடர்பான பல விடயங்கள் தெளிவூட்டப்பட்டன.
பிரதேச செயலக பிரிவுகளில் இருக்கும் தொழில் முனைவோருக்கான எட்டு நாள் வதிவிட பயிற்சி நெறிகள் மூலம் முயற்சியாண்மை விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டதுடன் பாசறையினை நிறைவு செய்தவர்களின் அனுபவ பகிர்வு இடம் பெற்றதுடன் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இப்பாசறையின் வளவாளராக சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் உத்தியோகத்தர்களான திருமதி ஜீ.தாரணி , ரீ நிலோஷன், ஆர்.சதிஸ், ஐ.எம் நாசர், மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.


