இலங்கைக்கு கடத்தவிருந்த பெரும் தொகையான போதைப் பொருட்கள் மீட்பு!

இந்தியா, தமிழ்நாடு, எஸ்.பி. பட்டினம் அருகே இலங்கைக்குக் கடத்துவதற்காகத் தனியார் பேருந்தில் கொண்டு செல்லப்பட்ட, இலங்கை மதிப்பில் சுமார் இருபது கோடி ரூபா பெறுமதியான 1 கிலோ 500 கிராம் ஐஸ் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இராமநாதபுரம் மாவட்டக் கடலோரப் பகுதியில் இருந்து இலங்கைக்குக் கடல் வழியாகச் சட்டவிரோதமாகக் கடத்திச் செல்வதற்கு ஐஸ் போதைப்பொருள் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இது எஸ்.பி. பட்டினம் அருகே வைத்து ஒரு தனியார் பேருந்தில் இருந்து சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் தனியார் பேருந்தின் நடத்துனர் மற்றும் சாரதி ஆகியோர் கைது செய்யப்பட்டு, இராமநாதபுரம் சுங்கத்துறை அலுவலகத்தில் வைத்து விசாரிக்கப்பட்டு வருவதாக இராமேஸ்வரம் செய்திகள் தெரிவிக்கின்றன.

இராமநாதபுரம் மாவட்டக் கடலோரப் பகுதிகளான தனுஷ்கோடி, மரைக்காயர் பட்டினம், வேதாளை, களிமண்குண்டு, தேவிப்பட்டினம், தொண்டி உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகளில் இருந்து தனுஷ்கோடி கடல் வழியாக இலங்கைக்குக் கஞ்சா, ஐஸ் போதைப்பொருள், சமையல் மஞ்சள், கடல் அட்டை, செருப்பு, பீடி இலை பண்டல்கள், பூச்சி கொல்லி, உரம், அழகு சாதனப் பொருட்கள் உள்ளிட்டவைகள் சமீப காலமாக அதிக அளவு கடத்தப்பட்டு வருகின்றன.

இந்தக் கடத்தல் சம்பவங்களைத் தடுப்பதற்காக இந்திய-இலங்கை சர்வதேசக் கடல் எல்லைப் பகுதியில் இலங்கை கடற்படை மற்றும் இந்தியக் கடலோரக் காவல் படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வரும் நிலையிலும், கடற்கரை ஓரங்களில் சுங்கத்துறை மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்து வரும் நிலையிலும் இந்தக் கடத்தல் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.

இராமநாதபுரம் மாவட்டக் கடலோரப் பகுதியில் இருந்து இலங்கைக்குக் கடல் வழியாக ஐஸ் போதைப்பொருள் கடத்தப்பட இருப்பதாகவும், அது ஒரு தனியார் பேருந்தில் கொண்டுவரப்பட இருப்பதாகவும் இராமநாதபுரம் சுங்கத்துறை துணை ஆணையாளருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், சுங்கத்துறை அதிகாரிகள் இராமநாதபுரம் கிழக்குக் கடற்கரைச் சாலையான மீமிசல், எஸ்.பி. பட்டினம், தொண்டி, மோர் பண்ணை, தேவிப்பட்டினம், காரங்காடு உள்ளிட்ட பகுதிகளில் இன்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது, மீமிசல் பேருந்து நிலையத்தில் இருந்து தொண்டி நோக்கி வந்த தனியார் பேருந்து ஒன்றை எஸ்.பி. பட்டினம் அருகே வைத்து சுங்கத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்திச் சோதனை செய்தனர். பயணிகளின் இருக்கைக்குக் கீழே கேட்பாரற்றுக் கிடந்த பேக் ஒன்றைச் சோதனையிட்டபோது, அதில் ஐஸ் போதைப்பொருள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, ஐஸ் போதைப்பொருளைப் பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள், பேருந்தில் இருந்த பயணிகளிடம் விசாரித்தபோது யாரும் அந்தப் பைக்கு உரிமை கோராததால், பேருந்தின் நடத்துனர் மற்றும் ஓட்டுநர் இருவரையும் இராமநாதபுரத்தில் உள்ள சுங்கத்துறை அலுவலகத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.