நூருல் ஹுதா உமர்
நலனுதவித் தொகைகளின் உயர்வு மட்டுமின்றி, மலையகப் பகுதியின் கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, வீடமைப்பு போன்ற துறைகளில் நீண்டகால மற்றும் நிலையான அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் கலாநிதி அன்வர் முஸ்தபா தெரிவித்தார்.
அக்கட்சியின் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அவர் தொடர்ந்தும் அங்கு கருத்து வெளியிடுகையில், 2026 வரவு செலவு திட்டத்தில் மலையக மக்களுக்கு வழங்கப்படும் நலனுதவித் தொகை ரூ.200/- உயர்த்தப்பட்டிருப்பது, அரசாங்கம் எடுத்துள்ள சமூகநீதி சார்ந்த ஒரு நல்ல மற்றும் வரவேற்கத்தக்க முடிவு.
மலையக மக்கள் வரலாற்றுச் சூழலில் பல பொருளாதார சமூக சவால்களையும் அபிவிருத்தி பின்தங்கல்களையும் எதிர்கொண்டு வருகின்றனர் என்பதையும், இந்நிலையில் அரசு அவர்களுக்கு வழங்கும் எந்த முன்னேற்றமான நிவாரணமும் சமூக பாதுகாப்பு வலையமைப்பை வலுப்படுத்தும் எனவும் வலியுறுத்தினார்.
வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ள நிலையில் ரூ.200/- உயர்வு முழுமையான தீர்வல்ல என்றாலும், அரசாங்கம் மலையக மக்களை முக்கியமாகக் கவனத்தில் கொண்டிருப்பது ஒரு நல்ல முன்னேற்றமாக பார்க்கப்பட வேண்டும். அனைத்து தகுதியான பயனாளர்களுக்கும் இந்த உயர்வு தாமதமின்றி சென்றடைய அரசு உறுதி செய்ய வேண்டும் என கலாநிதி அன்வர் முஸ்தபா வலியுறுத்தினார்.
நலனுதவி வழங்கும் நடைமுறைகள் வெளிப்படையானவையாகவும், அரசியல் சார்பற்ற முறையில் செயல்படக்கூடியவையாகவும் இருக்க வேண்டும். “மக்களின் நலனுக்காக எடுக்கப்படும் எந்தச் செயலையும் எங்கள் கட்சி பொறுப்புடன் பாராட்டும்; அதே வேளை நாட்டின் அனைத்து சமூகங்களின் உண்மையான வளர்ச்சிக்காக தேவையான விமர்சனங்களையும் பரிந்துரைகளையும் தொடர்ந்து முன்வைக்கும்” எனத் தெரிவித்தார்.


