தங்கப் பாதணிகளை தருகின்றோம் என்பதற்காக கால்களை வெட்டிக் கொடுக்க முடியாது அஸ்ரப் தாஹீர் எம்.பி

நூருல் ஹுதா உமர்

நிந்தவூர் அஷ்ரப் ஞாபகார்த்த கலாச்சார மண்டபத்திற்கு 300 மில்லியன் ரூபாய் நிதியினை ஒதுக்கி தந்தமைக்காக 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக தாஹிர் எம் பி வாக்களிப்பாரா…? என்ற கேள்வி எழுந்துள்ளது. இவ்வாறான கேள்விகளை தொடுக்கின்ற சகோதரர்களை பார்த்து பின்வரும் கேள்விகளை கேட்கின்றேன்.

கடந்த 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அம்பாறை, மட்டக்களப்பு திருக்கோணமலை ஆகிய மாவட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்படவில்லை. சிறுபான்மைச் சமூகத்தினர் வாழ்கின்ற இந்தப் பிரதேசங்களுக்கு போதிய அளவு நிதி ஒதுக்கீடு அபிவிருத்திக்காக ஒதுக்கீடு செய்யப்படவில்லை என அன்று சுட்டிக்காட்டிய போது இந்தியாவில் இருந்து நிதி வருகின்றது அந்த நீதி வந்தது உங்களுடைய பிரதேசங்களில் தேவையான அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என வாக்குறுதி அளித்தார்கள்.

ஆனால் இன்னும் ஒரு மாத காலத்தில் 2025 ஆம் ஆண்டு நிறைவடைய போகின்ற நிலையில் இதுவரை அந்த நிதி இந்தியாவில் இருந்து இன்னும் வந்து சேர்ந்ததாக தெரியவில்லை. அதுமட்டுமல்லாமல் ஒலுவில் துறைமுக நிர்வாக பணிகளால் அம்பாறை மாவட்டத்தில் சுமார் 120 ஹேக்டயர்க்கும் மேற்பட்ட நிலம் கடல் அரிப்பினால் காவு கொள்ளப்பட்டுள்ளது. அங்குள்ள ஏழை எளிய மக்களின் தென்னம் தோட்டங்கள், குடியிருப்புகள் மற்றும் மீனவர்களின் வாடிகள் முதலானவை அனைத்தும் கடலினால் அள்ளுண்டு போய் உள்ளதுடன் மீனவர்களின் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஒலுவில் பிரதேசத்தில் மீன்பிடி, மற்றும் வர்த்தகம் சார்ந்த இரண்டு துறை சார்ந்த துறைமுகங்கள் அங்கு இயங்க முடியாத நிலையில் மூடப்பட்டுள்ளது. வர்த்தகத் துறைமுகத்தை அபிவிருத்தி செய்யாவிட்டாலும் மீன்பிடி துறைமுகத்தை கவனத்தில் கொள்ளாமல் கைவிட்டமை கவலைக்குரியதாகும்.
எனில் அம்பாறை மாவட்டத்தில் நேரடியாக மீன்பிடித் துறையில் ஈடுபடுகின்ற சுமார் 5,000-க்கு மேற்பட்ட குடும்பங்கள் மட்டுமின்றி, மறைமுகமாக மீன் தொழிலில் தங்கி வாழ்கின்ற சுமார் 15,000 மேற்பட்ட குடும்பங்கள் இதன் மூலம் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த துறைமுகத்தின் அபிவிருத்தி காரணமாக பாதிக்கப்பட்ட காணிச் சொந்தக்காரர்களுக்கு இதுவரையும் முறையான நஷ்ட ஈடுகள் வழங்கப்படவும் இல்லை. கடல் அரிப்பினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் இதுவரை எந்தவிதமான நிவாரணமும் இந்த அரசினால் வழங்கப்படவில்லை. இவற்றுக்கான முன்மொழிவுகள் எதுவுமே இந்த வரவு செலவுத் திட்டத்தில் மூலம் முன்வைக்கப்படவில்லை . இதற்கான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படாத நிலைமை காணப்படுகின்றது.

அவ்வாறே தென்கிழக்கின் முக வெற்றிலையாக திகழும் கல்முனை மாநகரில் ,சுமார் 50 வருடங்களுக்கு மேலாக பழமை வாய்ந்த வர்த்தக சந்தை கட்டிடத் தொகுதி இன்று பயன்படுத்தப்பட முடியாது, இடிந்து விழக்கூடிய அபாயகரமான நிலையில் காணப்படுகின்றது. நாளாந்தம் சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இங்கு வியாபார நடவடிக்கைகளுக்காக சென்று வருகின்ற அந்த வர்த்தக கட்டிடத் தொகுதி பாவனைக்கு பொருத்தமற்ற நிலையில் காணப்படுகின்றது. மட்டுமல்லாமல் கல்முனை மாநகர சபை கட்டிடத் தொகுதி கூட சுமார் 80 வருடங்கள் பழமை வாய்ந்த கட்டடத்திலேயே இன்னும் இயங்கி வருகின்றது. ஒரு காலத்தில் பட்டின சபையாகவும் பின்னர் பிரதேச சபையாகவும், இருந்து நகர சபையாக மாறி இன்று மாநகர சபையாக திகழ்கின்ற இந்த கல்முனை மாநகர சபைக் கட்டடம் மிகவும் பழமை வாய்ந்ததாக காணப்படுகின்றது.

இவ்வாறான விடயத்தில் அந்தப் பிரதேசத்தை சேர்ந்த பாராளுமன்ற பிரதிநிதிகளும் மௌனம் காத்து வருகின்ற போது நாம் அதனை கண்டும் காணாமல் இருக்க முடியாது. எனவேதான் இந்த விடயம் குறித்தும், கல்முனை மாநகர அபிவிருத்தி தொடர்பிலும் இந்த வரவு செலவுத் திட்டத்தில் எதுவுமே குறிப்பிடப்படவில்லை
இவ்வாறான நிலையில் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க அவர்கள் பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில் , இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் துறை சார்ந்த நிபுணர்களை இந்த நாட்டுக்கு மீள திரும்பி வருமாறு அழைப்பு விடுக்கின்றார்.

ஆனால் இந்த நாட்டிலே வாழ்கின்ற துறை சார்ந்த நிபுணர்கள் , வைத்தியர்கள் பல்கலைக்கழக பேராசிரியர்கள் முதலான கல்விச் சமூகத்தினர்க்கு தேவையான சலுகைகளோ, சம்பளம் அதிகரிப்புகளோ, போதிய ஊதியங்களோ வழங்கப்படாத நிலையில் அவர்களுக்கு தேவையான பொது வசதிகள் கூட முறையாக ஏற்படுத்திக் கொடுக்கப்படாதுள்ளது. மேலும் அவர்களுக்கான தீர்வையற்ற வாகன இறக்குமதிகள் கூட தடை செய்யப்பட்டுள்ள நிலையில் அதற்கான முறையான திட்டங்கள் எதுவும் இந்த வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்படவும் இல்லை.

அதுமட்டுமல்லாமல் மின்சாரம், குடிநீர், எரிபொருள் முதலானவற்றுக்கான கட்டணங்களை குறைப்போம். வாழ்க்கைச் செலவு உயர்வை கட்டுப்படுத்தி மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவோம் என கூறிய இந்த அரசாங்கத்தின் வாக்குறுதிகள் எதுவுமே நடந்தாக இல்லை. அதற்கான திட்டங்களும் இந்த வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழிவுப்படவும் இல்லை. இந்த நிலையில் கலாச்சார மண்டபத்துக்கு மாத்திரம் 300 மில்லியன் ரூபாய் நிதியினை ஒதுக்கி தந்தமைக்காக இந்த வரவு செலவுத் திட்டத்திற்கு நாங்கள் எவ்வாறு ஆதரவாக வாக்களிப்பது என்பது குறித்து சிந்திக்க வேண்டும்.

தங்கப் பாதணிகளை தருகிறோம் உங்கள் கால்களை வெட்டி தாருங்கள் என்று கேட்கின்ற அரசியல்வாதிகள் இருக்கின்ற இந்த காலகட்டத்தில் நாங்கள் எங்களுடைய கௌரவத்தையும் மானத்தையும் இழந்து, வெறும் 300 மில்லியன் ரூபாய் பணத்தை ஒதுக்கீடு செய்தமைக்காக, இந்த வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிப்பதானது, எங்களை நம்பி வாக்களித்த மக்களுக்கு செய்கின்ற துரோகமாக அமையாதா..? என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஸ்ரப் தாஹிர் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்