நூருல் ஹுதா உமர்
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சம்மாந்துறையில் அமைந்துள்ள பிரயோக விஞ்ஞான பீடத்தின், அம்பாறை கல்முனை பிரதான வீதியில் அமைந்துள்ள மாணவர் விடுதியின் பின்புற களஞ்சியசாலையில் இன்று (29) காலை தீ விபத்து ஏற்பட்டது.
இன்று காலை சுமார் 7.20 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து தகவல் கிடைத்தவுடன், பல்கலைக்கழக நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்ததன் பயனாக தீ விரைவாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
தீயை அணைப்பதற்காக அம்பாறை, அக்கரைப்பற்று மற்றும் கல்முனை தீயணைப்புப் படையினர் மட்டுமல்லாமல் சம்மாந்துறை பிரதேச சபையின் தீயணைப்புக் குழுவினரும் இணைந்து தீயணைப்பு பணியில் ஈடுபட்டனர்.
தீ விபத்து குறித்து தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பதில் பதிவாளர் எம்.ஐ. நௌபர் கூறுகையில்,
“தீ இன்று (2025.10.29) காலையில் ஏற்பட்டுள்ளது. தீ விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகமும் சம்மாந்துறைப் பொலிசாரும் ஆராய்ந்து வருகின்றனர். தீயைக் கட்டுப்பாட்டில் கொண்டுவர விரைந்து உதவிய அம்பாறை, அக்கரைப்பற்று,கல்முனை தீயணைப்புப் படையினர் மற்றும் சம்மாந்துறை பிரதேச சபையின் தீயணைப்புக் குழுவினருக்கு பல்கலைக்கழகத்தின் சார்பில் நன்றி தெரிவிப்பதாக பதில் பதிவாளர் எம்.ஐ. நௌபர் தெரிவித்தார்.
மாணவர் விடுதியின் பின்புறம் அமைந்துள்ள பாவனைக்கு உதவாத பொருட்களை சேகரித்து வைக்கப்பட்டிருந்த களஞ்சியசாலையில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. தீ விபத்தில் ஏற்பட்ட சேதத்தின் அளவு குறித்து பல்கலைக்கழக நிர்வாகத்தினர் ஆராய்ந்து வருகின்றனர்.
UMAR LEBBE NOORUL HUTHA UMAR


