பாறுக் ஷிஹான்
அம்பாறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நீண்ட காலமாக தங்க ஆபரணங்களை திருடிய நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அம்பாறை மாவட்ட பிரதேச ஊழல் தடுப்புப் பிரிவு மற்றும் அம்பாறை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவு இணைந்து குறித்த நான்கு சந்தேக நபர்களையும் ரூ.25 லட்சம் மதிப்புள்ள தங்க ஆபரணங்களையும் மீட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்கள் கினியாகல சம்மாந்துறை மத்திய முகாம் மற்றும் அம்பாறை ஆகிய நான்கு பொலிஸ் பிரிவிலும் இந்த திருட்டுகளை மேற்கொண்டுள்ளதுடன் சந்தேக நபர்களிடமிருந்து ஆறு கிராம் ஹெராயினையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
அத்துடன் திருடப்பட்ட தங்க ஆபரணங்கள் அம்பாறை நகரில் உள்ள ஒரு தங்கம் விற்பனை செய்கின்ற நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும் தங்க விற்பனை நிலைய உரிமையாளரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த ஒரு மாதமாக அம்பாறை மாவட்டத்தில் களவாடப்பட்ட தங்க ஆபரண திருட்டு எண்ணிக்கை வேகமாக அதிகரித்திருந்தது. மேலும் அம்பாறை பிரதேச ஊழல் தடுப்புப் பிரிவு மற்றும் அம்பாறை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவு ஆகியவை ஒரு ரகசிய தகவலின் அடிப்படையில் அனைத்து சந்தேக நபர்களையும் கைது செய்தமை குறிப்பிடத்தக்கது.
சந்தேக நபர்களிடமிருந்து 6 கிராம் ஹெரோயின் மற்றும் 300 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் திருட்டுக்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பரிகஹகலே மற்றும் வாவின்ன பிரதேசங்களைச் சேர்ந்த 27 முதல் 31 வயதுக்குட்பட்டவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர்கள் போதைப் பொருள் பழக்கத்தினால் இத்தகைய கொள்ளைகளில் ஈடுபட்டிருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
சந்தேகநபர்கள் இன்று அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தடுத்து வைத்து மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


