பாறுக் ஷிஹான்
நகைகள் களவாடப்பட்டுள்ளதாக கணவரிடம் தப்பிப்பதற்கு பொலிஸாரை ஏமாற்றி நாடகமாடிய பெண்ணை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் 27 ஆந் திகதி அன்று அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல்- மஸ்லம் வீதி பகுதியில் உள்ள வீடான்றில் சுமார் 45 இலட்சம் ரூபா பெறுமதியான நகைககள் களவாடப்பட்டுள்ளதாகவும் தனது கணவர் வெளிநாடு ஒன்றில் இருந்து இலங்கைக்கு திடிரென திரும்பவுள்ள நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக நிந்தவூர் பொலிஸ் நிலையத்தில் 32 வயதுடைய குடும்பப்பெண் முறைப்பாட்டினை மேற்கொண்டிருந்தார்.
குறித்த முறைப்பாட்டிற்கமைய நிந்தவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஏ.டபிள்யு.எஸ். நிசாந்த வெதகே வழிகாட்டலில் பெருங்குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி உப பரிசோதகர் ஏ.எல்.எம். அஸீம் தலைமையில் பொலிஸ் குழுக்கள் புலன் விசாரணைகள் துரித கதியில் மேற்கொண்டிருந்தன.
இதற்கமைய அம்பாறையில் இருந்து தடயவியல் பொலிஸ் பிரிவு இலங்கை பொலிஸ் மோப்பநாய் பிரிவு என்பன இச்சோதனையில் பங்கேற்றிருந்தன.இருந்த போதிலும் குறித்த வீட்டில் களவாடப்பட்டற்கான சான்றுகளோ அல்லது மேற் கூறப்பட்ட 45 இலட்சம் ரூபா நகைகள் திருடப்பட்டமைக்கான எவ்வித ஆதாரங்களும் கிடைக்கவில்லை.இருப்பினும் விசாரணையின் தொடர்ச்சியாக முறைப்பாடு செய்த குடும்ப பெண்ணில் சந்தேகமடைந்த பொலிஸார் அப்பெண்ணை கடந்த ஓக்டோபர் மாதம் 3 ஆந் திகதி துருவி துருவி விசாரணை மேற்கொண்டனர்.இதன்போது பல்வேறு உண்மைகள் வெளிவரத் தொடங்கியது.
இதனடிப்படையில் கணவன் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக சென்ற நிலையில் தனியாக இரண்டு பிள்ளைகளுடன் வாழ்ந்த குறித்த பெண் தனது கையிருப்பில் இருந்த பணம் மற்றும் நகைகளை பல்வேறு தேவைகளுக்காக செலவு செய்துள்ளார்.இந்நிலையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக சென்ற கணவன் திடிரென நாடு திரும்பும் நிலையில் இருப்பதாக அப்பெண்ணிடம் குறிப்பிட்டுள்ளார்.இதனால் சற்று கலவரமடைந்த அப்பெண் 45 இலட்சம் ரூபா பெறுமதியான நகைககள் களவாடப்பட்டுள்ளதாக நாடகமாடி கல்முனை பகுதியில் உள்ள பிரபல நகையகத்திற்கு சென்று நகைகளை விற்பனை செய்ததை ஒப்புக்கொண்டதுடன் இச்செயற்பாட்டினை தனது கணவர் வெளிநாட்டில் இருந்து திடிரென இலங்கை வரவள்ளதாக தன்னிடம் தெரிவித்ததனால் இவ்வாறு நகைககள் திருடப்பட்டதாக நாடகம் ஆடியதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட அப்பெண் கைது செய்யப்பட்டு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் பொலிஸார் ஆஜர் செய்தனர்.இதன்போது குறித்த பெண்ணை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பீ ஏ.ரஞ்சித்குமார் உத்தரவிட்டார்.பின்னர் சந்தேக நபரான குறித்த பெண் சார்பில் இடைமனுக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.இதன்போது அப்பெண் தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் கடும் தொனியில் சந்தேக நபரை எச்சரித்த நிலையில் பிணையில் செல்ல நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.