அகில இலங்கை மாநகர சபை முதல்வர்களின் சம்மேளனத்தின் உப தலைவராக மட்டு மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் தெரிவு!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

அகில இலங்கை மாநகர சபை முதல்வர்களின் சம்மேளனத்தின் உப தலைவராக தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்டு மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வராக சேவையாற்றிவரும் சிவம் பாக்கியநாதன் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அகில இலங்கை ரீதியாக நடைபெற்ற முதல்வர்களின் ஒன்று கூடல் கடந்த (04) திகதி கொழும்பில் இடம்பெற்றது.

இலங்கை உள்ளூராட்சி மன்றங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் அதன் பிரதம நிறைவேற்று அதிகாரி ஹேமந்தி குணசேகரவின் ஒழுங்கமைப்பில் கொழும்பு கலதாரி ஹோட்டலில் இடம்பெற்ற நிகழ்வின் போது நிர்வாகத் தெரிவு இடம் பெற்ற போதே மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் சிவம் பாக்கியநாதன் உப தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை முழுவதும் இருந்து பல மாநகர சபைகளின் முதல்வர்கள் கலந்து கொண்ட நிலையில், தமிழ் பேசும் ஒருவருக்கு இத்தகைய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளமை மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் தமிழ் பேசும் சமூகத்திற்கும் பெருமை சேர்க்கும் விடையமாக தாம் அதனை பார்ப்பதாக கிழக்கு மாகாணத்தை சேர்ந்த அரசியல் பிரமுகர்களும், புத்திஜீவிகளும் தமது கருத்தை தெரிவித்து வருவதுடன், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

தேசிய மாநகர முதல்வர்களின் மாநாட்டின் போது சம்மேளனத்தின் தலைவராக நீர்கொழும்பு மாநகர சபையின் முதல்வர் எச்.எம்.டீ.ரொபேட் ஹீன் கென்டர் அவர்களும், செயலாளராக தெகிவளை மாநகர சபையின் முதல்வர் பறக்கும் சாந்த அவர்களும், உப செயலாளராக வவுனியா மாநகர சபையின் முதல்வர் எஸ்.காண்டீபன் அவர்களும், பொருளாளராக புத்தளம் மாநகர சபையின் முதல்வர் எம்.எஃப்.றிம்சாட் அகமெட் அவர்களும் தெரிவாகியுள்ளதுடன், சம்மேளனத்தின் முதலாவது அமர்வு எதிர்வரும் ஒக்டோபர் 29 திகதி நீர்கொழும்பில் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.