எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
காத்தான்குடி பிரதேச செயலகம் மற்றும் காத்தான்குடி முஸ்லிம் முதியோர் இல்லம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் சர்வதேச முதியோர் வாரத்தினை முன்னிட்டு முதியோர் கௌரவிப்பு, இரத்ததான முகாம், ஹத்தமுல் குர்ஆன் நிகழ்வு மற்றும் கலை நிகழ்ச்சி என்பன கடந்த வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இடம்பெற்றன.
காத்தான்குடி முஸ்லிம் முதியோர் இல்லத்தின் தலைவர் ஓய்வு பெற்ற அதிபர் கே.எம்.ஏ. அஸீஸ் தலைமையில் இந்நிகழ்வுகள் யாவும் இடம்பெற்றன. கடந்த வெள்ளிக்கிழமை (03) அதிகாலை ஜாமிஅதுல் பலாஹ் அறபுக் கல்லூரி மாணவர்களால் ஹத்தமுல் குர்ஆன் நிகழ்வு முஸ்லிம் முதியோர் இல்ல அஸீஸ் மணட்பத்தில் இடம்பெற்றது. அதனைத் தொடர்து பி.ப. 4.00 மணியளவில் முதியோர் கௌரவிப்பு மற்றும் பரிசில்கள் வழங்கும் நிகழ்வு காத்தான்குடி பிரதேச செயலாளர் திருமதி. நிஹாறா மௌஜுத் மற்றும் காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர் ஆகியோரின் பங்கு பற்றுதலுடன் இடம்பெற்றன.
இதன்போது முதியோர் இல்லத்தில் உள்ள 64 முதியோர்களுக்கும், 18 கிரம சேவகர் பிரிவுகளில் சமுக சேவையாற்றிவரும் முதியவர்கள் 18 பேரும் பரிசில்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். மேலும் இவ்வில்லதினால் சர்வதேச முதியோர் வாரத்தினை முன்னிட்டு நடாத்தப்பட்ட கவிதை, பேச்சு, பாடல் போட்களில் பங்குபற்றி வெற்றிபெற்ற மாணவர்கள் மற்றும் நடுவர்களுக்கான பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் முதியோர் இல்லத்தில் சேவைசெய்யும் ஊழியர்களும் பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இதனையடுத்து இரவு 8.00 மணியளவில் காத்தான்குடி களைஞர்களால் முதியோர்களை மகிழ்விக்கும் வண்ணம் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இதுதவிர கடந்த ஞாயிற்றுக்கிழமை (05) முதியோர்தினத்தை முன்னிட்டு வருடாந்தம் நடாத்தப்படும் இரத்ததான முகாம் 4வது தடவையாக இடம்பெற்றது. இதன்போது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.ஜே. அருள்ராஜ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதுடன் இரத்ததானம் வழங்கினார்.
“எமது மரியாதைக்குரிய முதியோர்கள்” எனும் தொனிப் பொருளில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளில் காத்தான்குடி உதவி பிரதேச செயலாளர் எம்.எஸ். சில்மியா, நிர்வாக உத்தியோகத்தர் எம்.எஸ்.எம். றஊப், கிராம உத்தியோகத்தர்களுக்கான நிர்வாக உத்தியோகத்தர் எம்.எம்.எம். ஜறூப் சமுக சேவை உத்தியோகத்தர் எஸ்.ஏ.சீ. நஜிமுதீன் உள்ளிட்ட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், காத்தான்குடி நகர சபை மற்றும் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர்கள், உலமாக்கள், ஊர் பிரமுகர்கள், பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.