(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
போக்குவரத்து நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிராம வீதிகளை புனரமைக்கும் செயற்றிட்டம் (13) சனிக்கிழமை ஆலையடிவேம்பு பிரதேசத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஆலையடிவேம்பு பிரதேசங்களில் நீண்ட காலமாக புனரமைக்கப்படாதிருந்த வீதிகள் இத்திட்டத்தின் ஊடாக புனரமைக்கப்படவுள்ளது. இந்நிகழ்வானது அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களின் அபிவிருத்தி குழுத் தலைவரும், இலங்கை அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினரும், பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவாவின் தலைமையில் நடைபெற்றது.
இதன் போது ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் திரவியராஜ், தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்கள், தேசிய மக்கள் சக்தியின் ஒருங்கிணைப்பாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
ஆலையடிவேம்பு பிரதேசங்களில் நீண்ட காலமாக புனரமைக்கப்படாதிருந்த 80 மீற்றர் நீளம் கொண்ட கேணி 05 ஆம் குறுக்கு வீதி 1.6 மில்லியன் ரூபா செலவிலும், 80 மீற்றர் நீளம் கொண்ட சிவலிங்கம் கடை வீதியானது 1.6 மில்லியன் ரூபா செலவிலும், 60 மீற்றர் நீளம் கொண்ட ஜோஸப் வீதியானது 1.3 மில்லியன் ரூபா செலவிலும், அபிவிருத்தி செய்யப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இதன்போது பொதுமக்கள் பலர் பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவாவைச் சந்தித்து தமது நன்றியைத் தெரிவித்தனர்.