தியாகிகள் கிண்ணத்திற்கான சாம்பியனாக மண்டூர் அணி வெற்றி வாகை!

( வி.ரி. சகாதேவராஜா)

35 ஆவது தியாகிகள் தினத்தை முன்னிட்டு காரைதீவில் நடைபெற்றுவந்த உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியில் மண்டூர் விளையாட்டுக் கழகம் சம்பியனாகி வெற்றி வாகை சூடியுள்ளது.

காரைதீவு விவேகானந்தா விளையாட்டு கழகம் தனது 38வது ஆண்டு நிறைவினை சிறப்பிக்கும் முகமாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் தோழர் பத்மநாபா மற்றும் உறுப்பினர்கள் படுகொலை செய்யப்பட்ட தினத்தினை முன்னிட்டு “மோகன் கணேஸ் ” ஞாபகார்த்த தியாகிகள் தின கிண்ணத்திற்கான உதை பந்தாட்ட சுற்றுப்போட்டியினை கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 8 அணிகளின் பங்குபற்றுதலுடன் புலம்பெயர் வாழ் தோழர்களின் அனுசரணையுடன் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்து நடத்தினர்.

இச்சுற்றுப்போட்டி தொடரின் இறுதிப் போட்டியானது விவேகானந்தா விளையாட்டு கழகத்தின் தலைவர் வி. தயாபரன் தலைமையில் விபுலானந்தா மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது .

முன்னதாக தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது .

இவ் இறுதிப்போட்டியில் மண்டூர் விளையாட்டுக்கழகம் மற்றும் புதிய வளத்தாப்பிட்டியை பிரதிநிதித்துவப்படுத்தி வீனஸ் விளையாட்டுக்கழகமும் மோதின.
முதற்பாதியில் மண்டூர் விளையாட்டுக் கழகம் ஒரு கோலினை அடித்து முன்னிலை வகித்தது , இறுதிப் பாதியில் மீண்டும் ஒரு கோலினை அடித்து முன்னிலை வகித்தது பின்னர் கடைசி ஒரு சில நிமிடங்களில் வீனஸ் விளையாட்டு கழகம் ஒரு கோலினை அடித்தது எனவே மண்டூர் விளையாட்டு கழகம் 2:1 எனும் கோல் கணக்கில் வெற்றியீட்டி மோகன் கணேஸ் ஞாபகார்த்த தியாகிகள் தின கிண்ணத்திற்கான சாம்பியனாக முடிசூடியது.
இச் சுற்றுப்போட்டியில் சம்பியனாகவும், இரண்டாம் நிலையினையும் பெற்ற இரு அணிகளுக்கும் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கும் பெறுமதி வாய்ந்த வெற்றி கேடயம் மற்றும் பணப்பரிசுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இவ் இறுதிப் போட்டிக்கு அதிதிகளாக புலம்பெயர் வாழ் தோழர்கள், மோகன் கணேஷ் குடும்ப உறுப்பினர்கள், விவேகானந்தா விளையாட்டுக் கழகத்தின் நிர்வாக சபை உறுப்பினர்கள் விளையாட்டுக் கழகங்களின் தலைவர்கள் கலந்து சிறப்பித்தனர்.