கிழக்கில் பறக்கும் பட்டங்கள்

பாறுக் ஷிஹான்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ள இளைஞர்களும், சிறுவர்களும்,  முதியவர்களும் தங்களது வீட்டு மேல்மாடியில் இருந்து கொண்டு பட்டம் ஏற்றுவது கிழக்கு மாகாணத்தின் அதிகமான பிரதேசங்களில் பிரதான பொழுதுபோக்காக காணப்படுகிறது.குறிப்பாக  ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையிலும் அச்சட்டம் தளர்த்தப்பட்ட காலத்திலும் இளைஞர்கள் கண்டுபிடிப்புகள் மற்றும் பாதுகாப்புடன் கூடிய பொழுது போக்கு விடயங்களை முன்னெடுத்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிராந்தியத்தில் அண்மைக்காலமாக பட்டம் விடுதல் செயற்பாடு தினந்தோறும்  அப்பகுதி இளைஞர்களிடையே பொழுதுபோக்கு செயற்பாடாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.இதனடிப்படையில் கல்முனையில் கோயில் வீதியில் உள்ள இளைஞர் குழுவும் சுமார் 12 அடி பட்டம் ஒன்றினை 4 வர்ணம் கொண்டு அமைத்துள்ளதுடன் அதனை பறக்கவிடும் முயற்சியில் வெள்ளிக்கிழமை(1) தொழிலாளர் தினத்தில்  ஈடுபட்டனர்.

இவ்விடயம் தொடர்பாக இளைஞர்கள் தமது கருத்தில்

வீட்டிலே முடங்கி இருப்பதால்  எங்களுக்கு  தூரக்காட்சிகளை பார்ப்பதில் சிரமம் ஏற்படும். ஆகையால் இக்காலத்தில் எம்முடன்  சேர்ந்து பட்டம் விடுங்கள் அல்லது ஆகாயத்தில் காணப்படும் பட்டங்களின் நிறம் மற்றும் வடிவம் போன்றவற்றை ஏனையோர் பார்த்து வர்ணங்களை அடையாளப்படுத்தி ரசியுங்கள்   இது ஒரு சிறந்த பயிற்சியாகும் வீட்டுக்குள் அடைந்து கிடப்பதனால் சலிப்பு ஏங்படுகின்றது என ஆதங்கங்களை தெரிவித்தனர்.

அது மட்டுமன்றி பட்டம் தயாரிப்பில் ஈடுபடும் குறித்த இளைஞர்கள் தமது குழுவிற்கு கல்முனை காற்றாடிச்சங்கம் ஒன்றினையும்  உருவாக்கி முகநூலில் தினமும் காணோளிகளை பதிவேற்றி வருகின்றனர்.பட்டத்தை வீட்டிலிருந்து கொண்டு விதம் விதமாக தயாரிப்பதுடன் மாலை வேளையானதும் மாடிகளில் ஏறிக் கொண்டு பட்டம் ஏற்றுவது கண்கொள்ளாக் காட்சியாக உள்ளது.பட்டம் ஏற்றும் பொழுதுபோக்கு இங்குள்ள ஊர்களில் சந்து பொந்துகளிலெல்லாம் வியாபித்துள்ளதால் இவற்றை தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களுக்கும் கடைகளில் பெரும் கிராக்கி நிலவுகின்றது. சிலர் இச்சந்தர்ப்பத்தை தமக்கு சாதகமாக பயன்படுத்தி பட்டம் தயாரித்து விற்பனை செய்வதிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

பட்டத்தில் கடதாசிப் பட்டம் , பெட்டிப் பட்டம் , கொக்குப் பட்டம் ,பிராந்துப் பட்டம் ,விண்பூட்டிய பட்டம் என்று பல்வகையில் உள்ளன. பட்டம் ஏற்றுவதற்கு வெப்பமான உலர்ந்த காற்று அவசியமாகின்றது.கிழக்கு மாகாணத்தில் பகல் வேளையில் வெப்பத்தின் தாக்கம் மிக அதிகமாகக் காணப்படுவதுடன் அவ்வப்போது சிறு தூறலுடன் மழையும் பெய்கின்றது. மாலை வேளையில் காற்றின் வேகம் அதிகரித்துக் காணப்படுவதால் பட்டம் ஏற்றுவதற்கு இது உசிதமான காலநிலையாக அமைகின்றது.

பட்டம் விடுதல் என்பது உலகின் சகல பாகங்களிலும் சிறந்த பொழுது போக்காக உள்ளது. அதற்காக பொழுது போக்குக் கழகங்களும் உள்ளன. எமது நாட்டில் பட்டம் ஏற்றுதல் என்பது காலத்துக்குக் காலம் பொழுது போக்காக நீடித்து வருகின்றது.