மீண்டும் முன்னோக்கியது மட்டு.மேற்கு

இம்முறை வெளியாகியுள்ள க.பொ.த. சாதாரண தர பெறுபேறுகளின் அடிப்படையில் மட்டக்களப்பு மேற்கு வலயம் அகில இலங்கை ரீதியில் 81வது இடத்தினைப் பெற்றிருக்கின்றது. கடந்த 2018ம் ஆண்டு பெறுபேறுகளின் அடிப்படையில் 91வது இடத்தினைப் பெற்றிருந்த குறித்த வலயம், 2019ம் நடைபெற்ற கல்விப்பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேற்று பகுப்பாய்வின் அடிப்படையில் 10இடங்கள் முன்னோக்கி சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் குறித்த வலயத்திற்குட்பட்ட மூன்று மாணவர்கள் 9ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர். நாட்டில் சாதாரணதரப்பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் இறுதிநிலையில் இருந்த கல்வி வலயம், படிப்படியாக வளர்ச்சிகண்டு தற்போது 81வது இடத்திற்கு முன்னேறியிருக்கின்றமை சிறப்புக்குரியது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கல்வி வலயங்களில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம் அதிகஸ்ட பாடசாலைகளையும், கஸ்ட பாடசாலைகளையும் கொண்டமைந்த கல்வி வலயமாகும்.

இவ்வலயத்தில் ஆசிரியர் பற்றாக்குறை இன்றும் நிலவி வருகின்ற நிலையிலும் முன்னோக்கி சென்றுள்ளமை எடுத்துக்காட்டத்தக்கது. தமது வழிகாட்டலின் கீழ், சிறப்பாக செயற்பட்டு பெறுபேற்றினை பெறுவதற்கு ஒத்துழைத்த ஆசிரியர்கள், அதிபர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், உதவிக்கல்விப் பணிப்பாளர்கள், பிரதிக்கல்விப் பணிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றிகளையும், சித்தியடைந்த மாணவர்களுக்கு பாராட்டினையும் தெரிவித்துக்கொள்வதாக வலயக்கல்விப் பணிப்பாளர் சி.சிறீதரன் இப்பெறுபேறுகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது குறிப்பிட்டார்.