கொக்கட்டிச்சோலை பகுதியில் கசிப்பு நிலையம் முற்றுகை

கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொக்கட்டிச்சோலை களப்பு பகுதியில் இன்று(20) திங்கட்கிழமை கசிப்பு நிலையம் ஒன்று முற்றுகை இடப்பட்டுள்ளது.

இதன் போது,  6வரல்களில் கசிப்பு உற்பத்திக்கான 1000லீற்றருக்கு மேற்பட்ட கோடா  கைபற்றப்பட்டுள்ளன.

இளைஞர்களின் உதவியோடு அப்பகுதியின் கிராம சேவை உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர், அண்மைய கிராம சேவை உத்தியோகத்தர் ஆகியோர் களப்பில் மேற்கொண்ட சுற்றிவளைப்பிலே இப்பெரும் தொகையான பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட பொருட்கள் அனைத்தும் கொக்கட்டிச்சோலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

கிராமங்களில் உள்ள இளைஞர்கள்,  சட்ட விரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த  ஒத்துழைக்கின்றமை முன்மாதிரியான செயற்பாடாகும். இது போன்று ஏனைய இளைஞர்களும் முன்வருகின்ற போது சட்டவிரோத செயற்பாடுகளை இலகுவாக கட்டுப்படுத்த முடியுமெனவும் சமூக செயற்பட்டாளர்கள் குறிப்பிட்டனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள  அசாதாரண சூழ்நிலையிலும்,  பல இடங்களிலும் கசிப்பு உற்பத்தி நிலைகள் முற்றுகை இடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

களப்பு மற்றும் நீர் நிலை அண்டிய பகுதிகளிலே அதிகளவான உற்பத்தி நிலையங்கள்,  மட்டக்களப்பு மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.