அவளும் நானும்

அவளும் அவளது நண்பியும் முதன்முதலாக அந்தக் கடைக்கு வந்தபோது நான் பெரிதாக அவளை கவனித்துக் கொள்ளவில்லை. வழமையாக எல்லோரையும் நோக்குவது போலவே அவளையும் நோக்கினேன். ஆனால் அவளும் அவளது நண்பியும் நான் முன் வாசலில் இருந்தும் என்னைக் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. இந்தக் காலத்தில் சில பெண்கள் இப்படியும் இருக்கின்றார்கள்தானே என்று நானும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அவள் அடிக்கடி அக்கடைக்கு வந்துபோனாலும் மற்றவர்களைப் போல என்னை சற்றும் ஏறெடுத்துப் பார்ப்பதில்லை. இருந்தும் ஏனையவர்களில் இருந்து அவள் வேறுபட்டவளாக எனக்கு சிறிது நாட்களிலே தோன்றினாள். கடைக்கு எத்தனைபேர் வந்து போனாலும் அவள் முகம் மட்டும் என்மனதில் ஆழமாய் பதிந்துவிட்டது. அவளும் அவளது நண்பியும் கடைக்குள் வந்து பொருட்களை வாங்கும் போது இருவருக்குள்ளும் ஏதோ பேசி சிரித்துக் கொள்வார்கள். ஒட்டுக் கேட்பது தவறென்றாலும் ஒரு நாள் இருவரும் என்ன பேசுகின்றார்கள் என என் காதை வைத்துக் கேட்டபோது கடையில் உள்ள பொருட்களை திருடுவோமா என நகைச்சுவையாகப் பேசிச் சிரித்தார்கள். எனக்கும் அவள் பேச்சைக் கேட்கும் போது சிரிப்பு வந்தது. அவளை எனக்கு பிடித்துவிட்டதால் என்னவோ தெரியவில்லை. ஆம் சிலபேர். பார்த்தவுடனே காதல் வரும் என்பார்கள் ஆனால் நான்; பார்க்கப் பார்க்கத்தான் காதல் வரும் என்கின்றேன்.

அவளைப் பார்த்ததும் எனக்கு காதல் வரவில்லை. அவளது செயற்பாடுகளை அடிக்கடி பார்க்கும் போதுதான் அவள்; எனக்குரியவள் என்று தோன்றியது. எனக்குள் காதல் மலர்ந்ததன் பின்னர் அவளை அடிக்கடி சந்திக்க வேண்டும். அவளிடம் ஒருவார்த்தையாவது பேச வேண்டும் என்றெல்லாம் எண்ணி இருந்தேன். அவள் என்னருகில் வரும்போதெல்லாம் எனக்கு பேச எந்த வார்த்தைகளுமே வாயில் இருந்து வரவில்லை. நான் வாய் பேசா ஊமையாகிவிட்டேன். ஒருநாள் இன்றாவது இவளோடு பேசிவிடமாட்டோமா என ஏங்கிக் கொண்டு நின்ற போது எதிர்பாராமல் அவளது கை என்னுடலில் பட்டது. எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. அவளோ, நான் ஊமையாகிக் கிடந்ததைப் போல் உணர்ச்சியற்றவளாய் சென்று விட்டாள். அந்த மட்டற்ற மகிழ்ச்சி அவ்விடத்திலேயே மறைந்து விட்டது. அவள் பல்கலைக்கழகத்தில் படிக்கின்றாள் என்பது தவிர அவளைப் பற்றி வேறெதுவும் அறியாத பாவியான நான் எப்படியாவது அவளிடம் என் காதலைச் சொல்லிட வேண்டும் என்ற மன உறுதி பூண்டு கொண்டு பேச எத்தணித்தேன். அந்நேரத்தில் என் மனசாட்சி வந்து உன் மேல் அவள் கைகள் பட்டும் உன்னை அவள் திரும்பிப் பார்க்கவில்லை. நீ உன் காதலைச் சொன்னால் மடடும் அவள் உன்னை ஏற்றுக் கொள்வாளா?. இந்தக்காலம் அழகைப் பார்த்துதான் காதலிக்கின்றார்கள். உனக்கு அந்தத் தகுதி இல்லை. எத்தனை காலமாக நீயும் இந்தக் கடையில் இருக்கின்றாய். யாருமே உன்னை ஏறெடுத்துப் பார்ததது கூட இல்லை. இவள் மட்டும் விதிவிலக்கா என்ன? உன் மனதைத் தேற்றிக் கொண்டு வேறு வழியைப்பார் என்றது.
நானும் சற்று நிதானமாக நின்று யோசித்தேன். என் மனசாட்சி எனக்கு ஒருபோதும் துரோகம் செய்யாது என்று நினைத்துக் கொண்டு அவளை மறக்க முயற்சித்தேன். கடவுள் எனக்கு எப்போதுதான் மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறார். இப்பொழுது மட்டும் சந்தோசத்தைத் தர என பெருமூச்சு விட்டுக் கொண்டு ஒரு மனிதனின் உயிர் ஊசலாடுவதைப் போல் கால்கள் தரையில் படாமல் தொங்கிக் கொண்டு நின்றேன். அன்றுதான் ஒரு சம்பவம் காத்திருந்தது.

அவளும் அழகானவள்தான். தனக்குப் பிடித்த காதலனை அவளும் தொலைத்துவிட்டாள் என்று எனக்கு அப்போது தெரியாது. முன்னர் அவள் இக்கடைக்கு வந்திருக்கிறாள். என்னை அவதானித்திருக்கிறாள். நானோ என் முன்னாள் காதலியின் மேல் கொண்ட காதலி;ன் பால் அவளை கவனிக்கவில்லை. அன்றைய நாள் அவள் தனியாகத்தான் வந்திருந்தாள். இருந்தும் அவளின் முகத்தில் தன் காதலனைத் தொலைத்த கவலை இருக்கவில்லை. அவளுக்கு என்னைப் பிடித்திருக்கின்றது என்று தெரிவுசெய்துவிட்டாள். “நமக்குப் பிடித்தவர்களைத் தேடிப் போவதை விட நம்மைப் பிடித்தவர்களை நாம் ஏற்றுக் கொள்வது சிறந்தது” என்ற கருத்து அவ்வேளையில் எனக்கு ஞாபகம் வந்தது. முதல் காதலை மறக்க முடியாவிட்டாலும் இவளுக்கு என்னைப் பிடித்திருக்கின்றது என்று அவளை ஏற்றுக் கொண்டேன். அந்நேரத்தில் கடவுள் பக்கம் சென்று அவருக்கு நன்றி கூறிக்கொண்டு அவளுடன் சிறிது தூரம் பயணம் செய்தேன். அவள் என்னுடன் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. நானும் எதுவும் பேசாமல் பெட்டிப் பாம்பினைப் போல அடங்கிக் கொண்டு சென்றேன். எங்களது பயணம் மௌனமாவே கடந்தது. அன்றிரவுதான் எனக்கு ஒரு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது என்று நினைத்து நிம்மதியாகத் தூங்கினேன்.
அடுத்த நாள் ஓர் பேரதிர்ச்சி எனக்காகக் காத்துக் கொண்டிருந்தது.

என்னுடைய காதலி என்னை வெளியில் அழைத்தாள். வெளியே வந்து பார்த்தபோது எனக்கு என்ன பேசுவதென்று தெரியவில்லை. என் காதலியோடு என் முன்னாள் காதலியும் நின்று கொண்டிருந்தாள். மனம் படபடத்தது. அப்போது என் காதலி என்னை அறிமுகப்படுத்தினாள். என் முன்னாள் காதலியோ என் மனம் கஸ்டப்படும் என்று சற்றும் கூட சிந்திக்காமல் இது நன்றாக இருக்கிறதா என்கின்ற மாதிரி கேட்டுவிட்டாள். ஏற்கனவே எனக்கு அவள் காதல் கிடைக்கவில்லை என்று நொந்து போய் இருக்கும் வேளையில், வெந்த புண்ணில் வேல் பாய்ந்தாற் போல் அவ்வார்த்ததையை அவளும் விட எனக்கு மூச்சுத்திணறியது. இருந்தும் அவளுக்கு என்னைப் பற்றி தெரியாமல் பேசிவிட்டாள். நான் அவளை காதலித்திருந்தேன் என்று தெரிந்திருந்தால் அவள் அவ்வாறு பேசியிருக்கமாட்டாள் என்று நினைத்துக் கொண்டு, என்னை விருப்பத்துடன் தெரிவு செய்த காதலி எனக்கு ஆறுதலாகக் பேசுவாள் என்று பார்த்தால், வேறுவழியின்றித் தெரிவு செய்தேன் என அவளும் கண்ணாடி உடைவதைப் போல் உண்மையைப் போட்டு உடைத்துவிட்டாள். அப்போது தான் எனக்கு விளங்கியது என்னைப் பிடித்து அவள் தெரிவு செய்யவில்லை தன் தேவைக்காக மட்டும் தான் தெரிவு செய்திருக்கின்றாள் என்று. கடவுளே இது என்ன எனக்கு வந்த சோதனை?

இந்த சோதனைக்கு மத்தியில் ஓர் ஆறுதல் பேச்சு “நான் பாதுகாப்பாக பார்த்துக் கொள்வேன்”. என் முன்னாள் காதலனைத் தொலைத்ததைப் போல் தொலைத்துவிடமாட்டேன் என என் காதலி கூறினாள். அப்பேச்சு வேதனைக்கு மத்தியிலும் என் மனதிற்கு ஓர் ஆறுதலாக இருந்தது. அவள் கூறியது போல வாக்குத்தவறாது என்னை நன்றாகவே பார்த்தும் பாதுகாத்தும் கொண்டாள். அவள் என்னை எவ்வாறு பாதுகாத்தாளோ அதே அளவு மழையிலும் வெயிலிலும் நானும் அவளை பாதுகாத்தேன்.
ஒருரவர்; நம்மை பிடிக்காவிட்டாலும் நம் மீது அக்கறை காட்டும் போது நாமும் மாறாக அக்கறை காட்டித்தானே ஆகவேண்டும். என்னுடைய காதலி என்னை நன்றாகப் பார்த்துக் கெர்ணடாலும் முன்னாள் காதலியின் மேல் வைத்த அன்பை என்னால் மறக்கவும் முடியவில்லை. முதல் காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்தாலும் அதுதானே காதலின் தொடக்கம். என்னதான் இருந்தாலும் இருக்கிறதை வைத்து வாழப்பழக வேண்டும் என்று கூறுவார்கள் இதன்காரணமாக மாற்றம் ஒன்றே மாறாதது என்பதற்கிணங்க என்னை மாற்றிக் கொண்டு எனது வாழ்க்கையை என் காதலியோடே கொண்டு செல்கின்றேன்.

இப்படிக்கு,
குடை

தெ.பேபிசாளினி
கி. பல்கலைக்கழகம்.