வெளிநாட்டில் தொழில்புரியும் மட்டக்களப்பை சேர்ந்தவர்களுக்கான வேண்டுகோள்

உழைப்புக்காக வெளிநாடுகளுக்குச் சென்று நீங்கள் படுகின்ற கஷ்டங்களையும், அதுவும் கொரோனா அச்சங்களுக்கு மத்தியில், தற்போது சரியான ஊதியமின்றி நீங்கள் தங்குமிடங்களில் முடங்கிக் கிடந்து படுகின்ற அவஸ்தைகளையும் நான் நன்கறிவேன். அது மாத்திரம் அல்ல எந்த ஒரு அலுவலகங்களையும் எவராலும் நாடி, அது நீங்கள் இருக்கும் இடமாக இருந்தாலும் சரி  இலங்கையாக இருந்தாலும் சரி, பிரச்சினையை தீர்க்க முடியாத சூழலில் உள்ளதை நான் அறிவேன்.

 இலங்கையில் இருக்கும் உங்களது குடும்பம் எவ்வாறு உள்ளதோ என்ற ஏக்கம் உங்களை மேலும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. தாயகத்தை விட்டு அங்கு வாழும் உங்களில் பலர் தங்களது பிரச்சினையை தீர்க்க முடியாத சூழலில் இருப்பதை நான் நன்கறிவேன்.
எத்தனையோ பேருக்கு உதவிய நீங்கள் தற்போதைய சூழ்நிலையில் இலங்கையில் வாழும் உங்கள் குடும்பத்தினருக்கும் உறவினருக்கும், நீங்கள் உதவ முடியாத துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளீர்கள். அதேபோன்று, கொரோனாவின் கொடூரத்தினால் தொடர்ச்சியாக இங்கும் ஊரடங்கு அமுலில் இருப்பதனால், வாழ்வாதாரம் இல்லாமல் கஷ்டப்படுபவர்கள் பற்றி நீங்கள் அறிவீர்கள்.
அரசின் உதவிகளும் சமுர்த்தி மற்றும் நிவாரண உதவிகளும் இங்கு வாழ்பவர்களுக்கு அவ்வப்போது கிடைத்து வருகின்ற போதும், நீங்கள் வெளிநாட்டில் வாழ்வதால் உங்களுக்கு வசதி இருப்பதாகக் கருதி, அந்த உதவிகள் கூட உங்கள் குடும்பத்துக்கு கிடைப்பதில்லை என்பதையும் நான் நன்கறிவேன்.
இந்த விடயங்களை மக்களோடு இரண்டறக்கலந்து வாழ்வதனால் அறிந்து, அவ்வாறு கஷ்டப்படுபவர்களுக்கும் பரம ஏழைகளுக்கும் நான் நேரடியாகவும். மறைமுகமாகவும் உதவிபுரிந்து வருகின்றேன்.
இந்த மாவட்டத்தில் பிறந்த நீங்கள், எமது மக்கள் பணிகளைப் பற்றி நன்கு தெரிந்துகொண்டவர்கள் என்ற வகையில், இறைவனை முன்னிறுத்தி நாம் செய்யும் நல்ல கருமங்களுக்கு, உங்களது துஆ பிராத்தனைகளில் என்னை சேர்த்துக்கொள்ளும்படி பணிவாய் வேண்டுகிறேன்.
வெளிநாடுகளில் தொழில் புரிவோரின் குடும்பங்கள் சொகுசாக வாழ்க்கை நடாத்துவதாக நினைக்கும் ஒரு சிலரின் மாயையும், அதிகாரிகளின் மற்றும் அரசியல் வாதிகளின் மனோபாவமும் மாற வேண்டும் என்பதில், நான் எப்போதும் உறுதியாக இருக்கின்றேன்.
இந்த மாவட்டத்தில், இரண்டும் கெட்டான் நிலையில் வாழும், வெளிநாட்டில்  தொழில் புரியும் உங்கள் குடும்பத்துக்கு, என்னால் முடிந்த உதவிகளை சரியாகத் திட்டமிட்டு செய்ய விழைகிறேன்.
எனினும், அவ்வாறான குடும்பங்களை தெரிவு செய்வதிலும் அடையாளப்படுத்துவதிலும் எனக்கு சிரமங்கள் இருப்பதனால், இந்த விடயத்தை மறைமுகமாக செய்ய வேண்டும் எனும் ஆதங்கம் எனக்குள் இருப்பதனாலும் கீழிருக்கும்   இலக்கத்தில் Whatsapp, Imo மூலம் என்னை தொடர்புகொண்டு, உங்களது விபரங்கள், குடும்பத்தவரின் தேவைகள் ஆகியவற்றை எனக்கு அறியத் தாருங்கள். என்னால் முடியுமான உதவிகளை உங்கள் குடும்பத்திற்கு செய்ய தயாராக இருக்கிறேன்.
இந்த நல்ல விடயத்தை செய்ய அல்லாஹ் துணை புரிய வேண்டும்.

இல :  +94 77 191 0381

வஸ்ஸலாம்
Z.A நசீர் அஹமட்
முன்னால் கிழக்கு மாகாண முதலமைச்சர்
ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ பிரதித் தலைவர்.
எஸ்.ஐ.எம்.நிப்ராஸ்