கல்முனை வலயக்கல்விப்பணிப்பாளராக புவனேந்திரன் கடமையேற்பு.

காரைதீவு  நிருபர் சகா


கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளராக இலங்கை கல்வி நிருவாகசேவையைச்சேர்ந்த செல்லத்துரை புவனேந்திரன் கிழக்கு மாகாண கல்வியமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று-16-வியாழக்கிழமை அவர் பணிமனையில் தனது கடமையினை பொறுப்பேற்றுக்கொண்டார். இவர் கல்முனை வலயத்தின் 10வது வலயக்கல்விப்பணிப்பாளராவார்.

ஏலவேயிருந்த பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல்ஜலீல் தனது 60வயதில் நேற்று ஓய்வுபெற்றதையடுத்து இப்பதில் நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காரைதீவைச்சேர்நத திரு.செ.புவனேந்திரன் காரைதீவு இ.கி.மிசன் ஆண்கள் பாடசாலையில் ஆரம்பக்கல்வியைப்பயின்று காரைதீவு விபுலாநந்தா மத்திய கல்லூரியில் இடைநிலைக்கல்வியைப்பெற்று உயர்கல்வியை கல்முனை கார்மேல் பற்றிமாக்கல்லூரியில் பயின்றவராவார்.

கிழக்குப்பல்கலைக்கழக பௌதீகவிஞ்ஞானபட்டதாரியான இவர் 2005இல் பட்டதாரிஆசிரியராக 2005இல் காரைதீவு விபுலாநந்தா மத்திய கல்லூரியில் பதவியேற்றார். பின்னர் இலங்கை கல்வி நிருவாகசேவை திறந்தபோட்டிப்பரீட்சையில் சித்திபெற்று கல்வி நிருவாகசேவைக்குள் 2009.03.23இல் நுழைந்து கல்முனை மற்றும் சம்மாந்துறை வலயங்களில் உதவி மற்றும் பிரதிக்கல்விப்பணிப்பாளராகப்பணியாற்றி இறுதியாக கல்முனை வலயத்தில் நிருவாகத்துக்குரிய பிரதிக்கல்விப்பணிப்பாளராக பணியாற்றியிருந்தார்.

இவர் பிரான்சில் கல்வி திட்டமிடல்துறையில் முதுமாணிப்பட்டம் பெற்றவர். கல்விடிப்ளோமா மற்றும் நிருவாக டிப்ளோமா பட்டமும் பெற்றவராவார்.
இவரது நியமனத்தையிட்டு கல்விச்சமுகம் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறது.

திரு.புவனேந்திரன் 11வருட கல்வி  நிருவாக சேவைக்காலத்தில் முதன்முறையாக வலயக்கல்விப்பணிப்பாளராக நேற்ற பதவியேற்றமை குறிப்பிடத்தக்கது.