மட்டக்களப்பில் நாளை திறக்கப்படும் அத்தியாவசியமற்ற வியாபார நிலையங்கள் சீல் வைக்கப்படும்

மட்டக்களப்பு மாநகர எல்லையினுள் நாளை திறக்கப்படும் அத்தியாவசியமற்ற வியாபார நிலையங்கள் சீல் வைக்கப்படும் என இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவான் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

நாளை காலை ( 16.04.2020 ) ஊரடங்கு தளர்த்தப்படும் வேளையில் மக்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களை வளமை போன்று பொதுச் சந்தை நான்கு இடங்களில் பிரித்து போடப்பட்டிருக்கின்றது. அந்த இடங்களில் கொள்வனவு செய்துகொள்ள முடியும்.

மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானம், கல்லடி சிவானந்தா விளையாட்டு மைதானம், ஊறணி சரஸ்வதி வித்தியாலய மைதானம் மற்றும் தாண்டவன்வெளி லீனியர் பூங்கா ஆகிய நான்கு பகுதிகளாக மட்டக்களப்பு பொது சந்தையின் நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும். இந்த முன்னெடுப்புகளுக்கு பொது மக்கள் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றோம்.

சமூக இடைவெளியைப் பின்பெற்ற வேண்டும். 99% கல்வி கற்ற சமூகம் உள்ள இந்த பிரதேசத்தில் இவ்வாறான செயற்பாடுகளை நாங்கள் ஒழுங்காக பின்பெற்ற வேண்டும். சமூக இடைவெளியை பின்பெற்றுகின்ற வேளையிலேயே தொற்றுகளில் இருந்து நாம் பாதுகாப்பாக இருக்கலாம்.

இதே போன்று கடைகளையும் வியாபாரச் செயற்பாடுகளையும் மட்டுப்படுத்தியுள்ளோம். பலசரக்குக்கடைகளும், மருந்தகங்களும், பழக்கடைகளும் தவிர்ந்த ஏனைய அனைத்துக் கடைகளும் தமது வியாபார செயற்பாடுகளை நிறுத்த வேண்டும்.

பொதுமக்கள் நெருக்கமாக கூடுவதைத் தவீர்க்க வேண்டும். கடந்த முறை நமது கள விஜயத்தின் போதும் சில விடயங்கள் அவதானிக்கப்பட்டு அவர்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஆனால் இந்த முறை அந்த நடவடிக்கைகள் மேலும் இறுக்கமாக கடைப்பிடிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுவதோடு இந்த முறை அவ்வாறு எங்களது அறிவுறுத்தல்களை மீறி வியாபாரங்களில் ஈடுபடும் வியாபாரிகளது கடைகள் சீல் பண்ணுவதற்கான ஏற்பாடுகளை நாங்கள் மேற்கொள்ள உள்ளோம்.

நாளை இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடும் வியாபாரிகளின் கடைகள் சீல் பண்ணப்படும், சீல் பண்ணப்படும் பட்ஷத்தில் அவ்வாறான கடைகள் மீண்டும் திறக்க பல நாட்கள் எடுக்கும். எனவே வியாபாரிகள் எங்களால் அறிவுறுத்தப்படுகின்ற அறிவுறுத்தல்களுக்கு  அமைய தங்களது வியாபாரங்களை மேற்கொள்ள வேண்டும். பொது மக்களும் எங்களால் முன்மொழியப்படுகின்ற செயற்பாடுகளை பின்பற்றி மட்டக்களப்பில் கொரோனா வராது பாத்து காக்க உதவி புரியுமாறு கேட்டுக்கொள்கின்றேன்- என அவர் குறிப்பிட்டுள்ளார்.