மருத்து நீர் தேய்த்துவிட்டால்.

வழங்கிடு…

புது மகளே! புது மகளே! வா வா – என்று
புன்னகையோடு உன்னை வரவேற்று
மகிழ்ச்சி கொள்ள ஆசைதான் – ஆனால்
மனம் இன்று தயாரில்லை.

புத்தாண்டு பிறப்பென்றாலே – முன்னமே
புதுமை சேர்ந்துவிடும் புத்தெழுச்சி கூடிவிடும்
புலன்கள் கலங்கி நிற்க – இப்போ
முகம்மலர்ந்து வரவேற்பது முறையோ?

உலகத்தில் உள்ள – மனித
உயிர்களெல்லாம் ஒடுங்கி நிற்க
உள்ளம்குளிர்ந்து வானவேடிக்கையுடன் – உன்னை
உற்சாகமாய் வரவேற்பது முறையோ?

மருத்து நீர் தேய்த்து விட்டால் – எம்மை
பீடித்திருக்கும் தோசங்கள் நீங்கிவிடும்.
மருத்து நீர்பெறுவதே சிக்கலானதாய் – இந்நாளில்
மனமுவர்ந்து வரவேற்பது முறையோ?

ஆடைகள் வாங்கி, அணிந்து – அந்நாளில்
ஆண்டவனை வணங்கிடுவோம்.
ஆடையகம் பூட்டு ஆலயமும்; செல்லத்தடை – இப்போ
ஆடம்பரமாய் வரவேற்பது முறையோ?

கொத்துக்கொத்தாய் – உலகில்
செத்து மடிகையில்
குதூகலித்து கொண்டாடி – உன்னை
வா வா என்று வரவேற்பது முறையோ?

வீட்டிற்குள் பூட்டி வைத்து – எம்மை
வீதிக்கும் செல்ல விடாது.
சட்டமும் போட்டியிருக்கையில் – வாவென்று
சாதி, சனத்துடன் வரவேற்பது முறையோ?

வாழ்த்துக் கேட்கும் காதுகள் – மடியும்
ஊன் உடல்களின் எண்ணிக்கையையும்
தொற்றாளர்களின் எண்ணிக்கையையும் – தினம்
செவியில் வாங்கி வரவேற்பது முறையோ?

கொடுமை செய் கொலைகாரனை – நீ
ஜனனிக்கும் முன் அழித்திருந்தால்
ஆரவாரத்துடன் அகிலமே – உன்னை
ஒன்றுகூடி வரவேற்றிருக்கும்!

மயான அமைதி காக்கும் நம்தேசம் – இங்கு
மனசஞ்சலத்துடன் கழியாது
பிறக்கும் சார்வரி – அனைவருக்கும்
சந்தோசத்தினை வழங்கிடு

வ.துசாந்தன்.