மகளிர் அணித்தலைவிக்கு யோகேஸ்வரனின் பதில் பட்டியலாக

தமிழ்மக்கள் விடுதலைபுலிகளின் கட்சியின் ஊதுகுழலாக கொக்கரிக்கும் மகளிர் அணி தலைவிக்கு பிள்ளையானால் செய்த கொலை கொள்ளை பாலியல் வன்புணர்வுகள் தெரியுமா என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஷ்வரன் கேள்வியெழுப்பியுள்ளார்..

வெருகலில் விடுதலைப்புலிகள் தமது TMVP மகளிர் உறுப்பினர்களை வன்புணர்வுக்குட்படுத்தி கொலைசெய்தார்கள் என அந்த கட்சி மகளிர் அணி தலைவி செல்வி என்பவர் கூறிய கருத்துக்கு பதில் கூறும்போதே இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில் தற்போது மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராசசிங்கம் அவர்களுடைய கொலை சந்தேகநபராகவே பிள்ளையான் சிறையில் உள்ளார் இவர் அரசியல் கைதி இல்லை இது செல்வி அக்காவுக்கு நன்கு தெரியும்.

கடந்த 2004,ல் புலிகள் இயக்கத்தை பிரித்தவர்கள் கருணாவும் பிள்ளையானும்தான் அவர்கள் புலிகளுடன் இருந்து புலிகளால் பிரபல்யம் அடைந்து பிரதேசவாதம் பேசி புலிகளை இராணுவத்துடன் சேர்ந்து காட்டிக்கொடுத்தமையால்தான் பிளவு ஏற்பட்டது.

வன்னிப்புலிகள் கிழக்கு புலிகள் என பேதம் பேசியவர்கள் யார்? கருணாவும் பிள்ளையானும்தானே வெருகல் சண்டையில் இறந்த அத்தனை பேரையும் புலிகளின் தலைவர் பிரபாகரன் மாவீரர்பட்டியலில் சேர்க்கப்பட்ட வரலாறு செல்விக்கு தெரியாது.

அதுவும் அப்போது நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்த 22, தமிழ்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலைவர் பிரபாகரன் நடத்திய சந்திப்பின்போது மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி வெருகலில் உயிர்நீத்த அத்தனை போராளிகளையும் மாவீரர் பட்டியலில் இணைக்கப்பட்டது இந்த செய்தி 2004 ல் ஊடகங்களில் வெளியானது போரில் இறந்தவர்கள் அனைவரையும் நாம் மதிக்கின்றோம்.

இந்த செல்வி கூறுவது போல் எவரும் வன்புணர்வுக்கு உட்படுத்தப்படவில்லை என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.

கடந்த காலங்களில் பிள்ளையானின் தலைமையில் பல கொலைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதை பல மனிதநேய அமைப்புகள் சுட்டிக்காட்டி இருந்தன. இது செல்வி அக்காவுக்கு தெரியாவிட்டால் தருகிறேன் பாருங்கள்.

விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து பிள்ளையான் விலக்கப்பட்ட பின்னர் , கிழக்கு மாகாண முதலமைச்சராக விளங்கிய பிள்ளையான் பல கொலைச் சம்பவங்களுடன் தொடர்புபட்ட நிலையில் கைது செய்யப்பட்டார்.

மனிதவுரிமை ஆணைக்குழுவின் முன்னிலையில் இடம்பெற்ற விசாரணையில் வெளிவந்துள்ள தகவல்களின் அடிப்படையில் பிள்ளையானின் கொலைப்பட்டியல் இதோ:

அரியநாயகம் சந்திரநேரு, அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர். 07/02/2005 அன்று கொலை செய்யப்பட்டார்.

E.கௌசல்யன், மட்டக்களப்பு – அம்பாறை அரசியல் துறை பொறுப்பாளர், தமிழீழ விடுதலைப் புலிகள். 07/02/2005 அன்று கொலை செய்யப்பட்டார்.

தர்மரட்ணம் சிவராம், சிரேஷ்ட ஊடகவியலாளர். 28/04/2005 அன்று கொலை செய்யப்பட்டார்.

ஐயாத்துரை நடேசன், சிரேஷ்ட ஊடகவியலாளர். 31/05/2004 அன்று கொலை செய்யப்பட்டார்.

வன்னியசிங்கம் விக்னேஸ்வரன், திருகோணமலை மாவட்ட தமிழர் அமைப்பின் உறுப்பினர். 07/04/2006 அன்று கொலை செய்யப்பட்டார்.

சிவசுப்ரமணியம் ரவீந்திரநாத், உபவேந்தர் கிழக்கு பல்கலைக் கழகம். 15/12/2006 அன்று கடத்தப்பட்டு பொலன்னறுவை மாவட்டம், செவனப்பிட்டி, தீவுச்சேனை என்ற இடத்தில் கொலை செய்யப்பட்டார்.

ஜோசப் பரராஜசிங்கம், மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர். 25/12/2005 அன்று மட்/புனித மரியன்னை இணைப்பேராலயத்தினுள் வைத்து கொலை செய்யப்பட்டார்.

வர்ஷா ஜூட் என்னும் 6 வயது சிறுமி, 11/03/2009 அன்று திருகோணமலையில் கடத்தப்பட்டு, கப்பம் கோரப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

சதீஷ்குமார் தினூஷிகா என்னும் 8 வயது சிறுமி, 28/04/2009 அன்று மட்டக்களப்பு, பூம்புகார் என்னும் இடத்தில் வைத்து கடத்தப்பட்டு, கப்பம் கோரப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலைப்பட்டியல் தொடர்பில் பொதுமக்கள் கடும் அச்சத்தில் உள்ள நிலையில் , சில தரப்புகள் பிள்ளையானை கிழக்கின் பலம் வாய்ந்த அரசியல் சக்தியாக மாற்ற வேண்டும் என்னும் முனைப்பில் செயலாற்றி வருகின்றமை வேடிக்கையானது எனவும் மேலும் கூறினார்.