தற்போதைய சூழலில் சமத்துவமற்ற கற்றல் கற்பித்தல் முறை பொருத்தமானதா?

காலங்களுக்கும், தேவைகளுக்கும் ஏற்றவாறு மாற்றங்கள் நிகழ வேண்டியது அவசியமானது. ஆனால் அம் மாற்றம் ஒடுக்குமுறை அற்றதாக, ஆரோக்கியமானதாக இருக்கவேண்டும் அல்லவா?
தற்போது உலகமே ஒரு நோய்த் தொற்றால் அவதியுற்று கொண்டும் அதற்கான தீர்வுகளை சிந்தித்தும், செயற்படுத்தியும் கொண்டிருக்கும் இவ்வேளையில். எமது நாட்டிலும் அதற்காக பல தரப்பினரும் தமது அர்ப்பணிப்பை வழங்கி வருகின்றமை மறுக்க முடியாத உண்மை.
நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த அனைவரும் வீடுகளுக்குள் இருக்க வேண்டப்பட்டுள்ளோம். இந்நேரத்தில்  “அனைத்து அரசு ஊழியர்களும் வீட்டிலிருந்து பணியாற்ற வேண்டும்” என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கல்விசார் ஊழியர்களும் உள்ளடக்கப்படுகின்றார்கள். இவ்வைரஸ் பிரச்சினை காரணமாக உளரீதியாகவும், ஊரடங்கு காலத்தில் போதிய உணவின்றியும் எத்தனையோ குடும்பங்கள் தவிக்கும் இத் தருணத்தில்; இத்திட்டத்தின் நடைமுறைச் சாத்தியம் பற்றி சிந்தித்தோமா?
இது முதலாம் தவணை ஓய்வு வழங்கும் காலம். ஆனால் அதைவிட சிறிது காலம் கூடி இருக்கின்றது இன்னும் அது அதிகரிக்கலாம் அல்லது அதிகரிக்காமல் விடலாம். ஆனால் வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலையில் உணவுத்தட்டுப்பாடு, மருந்துத்தட்டுப்பாடு ,முகமூடி அணிய வேண்டும், கிருமிநாசினி தெளிக்கவேண்டும்…. இவற்றையெல்லாம் செய்து நம்மையும் நம்மைச் சுற்றியுள்ள உயிர்களையும் பாதுகாக்கவேண்டிய இத்தருணத்தில் இந்நிலைமையின் சாத்தியப்பாட்டை நாம் சிந்திக்க வேண்டும்.
ஆசிரியர்கள் இணையத்தின் மூலமான கற்கைக்கு மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கின்றார்கள். இலவசக் கல்வி வழங்கும் நமது நாட்டில் மாணவர்களுக்கு இதுவரை எத்தனை இலத்திரனியல் சாதனங்கள் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது என்ற கேள்வி உள்ள நிலையில், இவ்வாறான சூழலில் சமத்துவமற்ற கற்றல் கற்பித்தல் முறை பொருத்தமானதா?
அனைத்து ஆசிரியர்கள்ளிடமும் ஸ்மார்ட்போன் வசதிகள் உண்டா? இந் நிலையில் மாணவர்களின் நிலை என்ன ? அதிலும்  வறிய குடும்பங்களில் உள்ள மாணவர்களின் நிலை என்ன? ஸ்மார்ட் போனுக்கும் அதில் இணைய வசதியினை ஏற்படுத்த மீள்நிரப்பு அட்டைகளுக்கு எங்கு செல்வது? முன்கூட்டியே ஆயத்தம் அற்ற நிலையில் பரிச்சயம் குறைவான இணைய கற்கை அனைத்து மாணவர்களுக்கும் பொருத்தமானதா? அதுவும் நெருக்கடியான இன்நிலையில் இதற்கு முகங்கொடுக்க தயாராக உள்ளனரா?
இணையத்தில் அனைவரையும் கற்க அழைப்பதன் ஊடாக தொலைத்தொடர்பு கம்பெனிகளை வளர்க்கின்றோம் என்பது மட்டும் தெளிவு.
மாணவர்கள் கற்க வேண்டும். ஆனால்  எதைக் கற்கவேண்டும்?  எதற்காக கற்கவேண்டும்? என்பது முக்கியமானது. பரீட்சைக்காக எம்மைத் தயார்படுத்திக் கொள்வதா? அல்லது அசாதாரண சூழ்நிலையில் எதிர்வரும் நாட்களில் தம்மை எவ்வாறு பாதுகாப்பது என்பது தொடர்பாக கற்பதா? வீட்டு வேலைகளில் ஈடுபடுதல், தோட்ட வேலைகளில் ஈடுபடுதல்,விளையாடுதல்,கடந்த காலங்களைப் பற்றி பேசுதல், குடும்ப உறவினர்களுடன் நேரம் செலவிடுவது என்பன முக்கியமில்லையா? ஏன் இவற்றை கல்வியாக எம்மால் கொள்ள முடியாமல் உள்ளது?
மனித விழுமியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காது முதலாளித்துவத்தை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் மனிதஇனம் இத் தருனத்திலாவது தமைநிறுத்தி யோசிக்கக்கூடாதா?
உண்மையில் யாருக்காக இத்திட்டம்? வீட்டில் உள்ள ஆசிரியர்களை வேலை வாங்க வேண்டும் எனும் திட்டமா? அல்லது மாணவர்கள் கற்க வேண்டும் என்ற நோக்கமா? கல்வி முக்கியமானதுதான். கல்விக்கான கொள்கைகள் அனைத்து மாணவர்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். ஆனால் இங்கு தொழில்நுட்ப வாய்ப்பு சமனற்ற சூழலில் நாங்கள் செல்வந்த, நடுத்தர வர்க்க பிள்ளைகளை மாத்திரம் கவனத்தில் கொள்கின்றோமே அன்றி ஏழை மாணவர்களை அல்ல என்பது தெட்டத் தெளிவு.
இதனூடாக மீண்டும் மீண்டும் நாம் ஏழை மக்களையும், அவர்களுக்குள்ள சொற்ப வாய்ப்புகளையும் நசுக்குவதுடன், அவர்கள் முதுகில் ஏறி சவாரி செய்யும் சுயநலவாதிகள் என்பதை மீண்டும் நிரூபிக்கத் தயாராகின்றோம் என்பதனை நினைவில் கொள்வோம்.
அ.கீதாநந்தி