உதவிகளை கிராம மட்டங்களில் மக்கள் இலகுவில் பெற்று கொள்வதற்கு பரிந்துரை

சமுர்த்தி சார்ந்த உதவிகளை கிராம மட்டங்களில் மக்கள் இலகுவில் பெற்று கொள்வதற்கும் அதனை இன்னும் வினைத்திறனுடனும் பாதுகாப்புடனும் செய்வதற்குமான சில பரிந்துரைகளை முன்வைத்து சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்திற்கு சமதை பெண்ணிலைவாத குழுவினர் கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளதாக அவ்வமைப்பினர் குறிப்பிட்டனர்.

மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில், தற்போதைய இடர்கால நிலையில் மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள், மற்றும் விடயங்களில் தெளிவின்மை, பாதுகாப்பு போன்ற விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளதுடன், எதிர்காலத்தில் பின்பற்றக்கூடிய பரிந்துரைகளையும் முன்வைத்துள்ளதாக தெரிவித்தனர்.

மேலும், இடர்க்காலத்தில் உதவி தேவைப்படும் மக்களுக்கான உதவிகளை வழங்குவதற்காக எமது நாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளில் பல தரப்பினரும், குறிப்பாக அரச உத்தியோகத்தர்கள் பாடுபட்டு கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றிகளையும் தெரிவித்துக்கொண்டனர்.

உதவிகள் தேவைப்படும் மக்கள் அவற்றை அடைவதில் பல சிரமங்களை இன்னும் எதிர்கொண்டபடி தான் இருக்கிறார்கள். குறிப்பாக மக்களுக்கும் சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கும் இடையில் இடம்பெற்ற முரண்பாடுகள், சமூக விலகல் கடைப்பிடிக்கப்படாமை, உடல், உள ரீதியான அலைக்கழிப்பு போன்ற பல்வேறு விடயங்களையும் இதில் சுட்டிக்காட்டியுள்ளனர்.