கொரோணா தொற்றும், கர்ப்பிணிப் பெண்கள் பராமரிப்பும்…

(மகப்பேற்று வைத்திய நிபுனர் – கே.ஈ. கருணாகரன்)

இவ்வைரஸ் தாக்கம் குறித்த அறிவும், ஆராய்ச்சி முடிவுகளும் அதற்கான பரிகாரம் மற்றும் மருந்தின் பாவனையும் மட்டுப்படுத்தப்பட்டதாகவே உள்ளதனால் பாதிப்பின் கனமும் அதிகமானதாகவே இருக்கும். இந்நிலையில் கர்ப்பிணிப் பெண்களில் இவ்வைரஸ் தொற்று ஏற்படுத்தும் பாதிப்பும் சிகிச்சை முறை குறித்தும் கவனிக்கவேண்டியுள்ளது என மட்டக்களப்பு, போதனா வைத்தியசாலையின் மகப்பேற்றியல், பெண்நோயியல் நிபுணர் வைத்திய கலாநிதி கே.ஈ.கருணாகரன் தெரிவித்தார்.

தற்போது ஏற்பட்டுள்ள கொரோணா தொற்று நிலையில் கர்ப்பிணிப் பெண்களின் பராமரிப்பு தொடர்பில் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

கொவிட் 19 வைரஸ் தாக்கம் உலகம் முழுமையையும் தலைகீழாகப் புரட்டி வதைத்துக் கொண்டிருப்பதனை கடந்த சில மாதங்களாக அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம். மக்களது இயல்பு வாழ்க்கை முற்றாகவே பாதிப்படைந்தும், தொழிற்துறைகள் ஸ்தம்பிதமடைந்தும் உள்ளதுடன் மக்கள் வீடுகளுக்குள் முடங்கியும் உள்ளனர். பொதுப்போக்குவரத்து வெகுவாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன் இன்னும் பல சமூக, பொருளாதார மற்றும் ஆன்மீக விடயங்களுக்கும் தடை நடைமுறையில் உள்ளது.

இருப்பினும் எமது நாடு உட்பட பெரும்பாலான நாடுகளில் நோய்வாய்ப்படுவோரின் எண்ணிக்கை 10 இலட்சத்தை தாண்டியிருக்கும் வேளையில் இறப்போரின் எண்ணிக்கை அறுபதினாயிரத்தைத் தாண்டியுள்ளது. இந்நிலையில் தற்போது தாக்கியுள்ள கொரோனா வைரஸானது புதிய பிரிவினதாகவிருப்பதனால் இவ்வைரஸ் தாக்கம் குறித்த அறிவும், ஆராய்ச்சி முடிவுகளும் அதற்கான பரிகாரம் மற்றும் மருந்தின் பாவனையும் மட்டுப்படுத்தப்பட்டதாகவே உள்ளதனால் பாதிப்பின் கனமும் அதிகமானதாகவே இருக்கும். இந்நிலையில் கர்ப்பிணிப் பெண்களில் இவ்வைரஸ் தொற்று ஏற்படுத்தும் பாதிப்பும் சிகிச்சை முறை குறித்தும் கவனிக்கவேண்டியுள்ளது.

இலங்கையில் குறிப்பாக கொழும்பு மாநகரில் காசல்வீதி பெண்கள் வைத்தியசாலை இத்தகைய வைரஸ் நோய்த்தாக்கத்திற்குள்ளாகும் கர்ப்பிணிப் பெண்களுக்கான சிகிச்சை நிலையமாக ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன், கொரோனா நோயாளிகளைக் கையாளுகின்ற வைத்தியசாலைகளும் இத்தகைய தாய்மாருக்கான சிகிச்சை நிலையங்களாகும் வாய்ப்பும் உள்ளது.

பொதுமக்கள் கூடுவதனை தவிர்க்கும் பொருட்டு கர்ப்பவதிகளுக்கான சாய்சாலைக் கவனிப்பு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் நடைபெறுகின்றதாயினும், சுகாதாரசேவை அதிகாரி பிரிவில் கடமையாற்றுகின்ற பொதுச்சுகாதார உத்தியோகத்தர்கள், மருத்துவ மாதுக்கள் தங்கள் வழமையான நடைமுறைகளை கடைப்பிடித்து கர்ப்பவதிகளுக்கான கவனிப்பினை செய்து வர ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, இருதயநோய் போன்ற இன்னோரன்ன நோய்நிலை கொண்ட தாய்மாருக்கான விசேட நிபுணத்துவ கவனிப்பு கிரமமாக இடம்பெறுவதற்கான ஒழுங்குகள் தொடர்ந்தும் கடைப்பிடிக்கப்படுகின்றன. சிறிய வைத்தியசாலைகளிலிருந்து விசேட நிபுணத்துவ கவனிப்பிற்காக கர்ப்பவதிகளை அம்பியுலன்ஸ் வாகனம் மூலம் மாற்றுகின்ற நடைமுறையும் வழமைபோல் நடைபெறுகின்றது.

இவ்வாறான நிலையில் காய்ச்சல், சளிச்சுரம் போன்ற நோய் அறிகுறிகள் தென்படும் கர்ப்பவதித் தாய்மார் உடனடியாக வைத்திய கவனிப்பிற்குள் உட்படுவதுடன் ஏனையோர் முடிந்தவரையில் வீட்டில் தங்கியிருத்தலும் இந்நோய்த்தாக்கத்தின் பாதிப்பிலிருந்து விடுபட எமக்கு உதவியாக இருக்கும். மேலும் பொது இடங்களுக்குச் செல்லாதிருத்தல், தன் சுத்தம் பேணல் போன்ற அறிவுறுத்தல் நடைமுறைகளை கர்ப்பவதிகள் கடைப்படிப்பதுவும் அவசியமாகின்றது.

உலகளாவிய ரீதியில் இதுவரையில் ஒருசில கர்ப்பிணித் தாய்மார்களே கொவிட் 19 வைரஸ் தொற்றுக்குள்ளாகி அடையாளங் காணப்பட்டுள்ளனர். இவ்வாறான 34 தாய்மாரில் மேற்கொள்ளப்பட்ட கணிப்புக்களின் பிரகாரம் இவர்கள் எவருக்கும் பாரதூரமான நோய்த் தாக்கம் காணப்படவில்லையென அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய தாய்மாருக்கான பிரத்தியேக கவனிப்பு ஏனைய தொற்றாளர்களுக்கு உள்ளவாறாகவே கடைப்பிடிக்கப்படல் வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றது. இவர்கள் தனிமைப்படுத்தப்படுவதுடன் தங்கள் பிரதேச சுகாதாரசேவைப் பணியாளர்கள், பிரசவம் செய்யவிருக்கும் வைத்தியசாலை மற்றும் மகப்பேற்றியல் நிபுணர் ஆகியோருக்கும் அறிவிக்கப்படல் வேண்டும். இதன்மூலம் இத்தாய்மார் ‘எத்தகைய வைத்தியசாலையில் பிரசவிக்க வேண்டும்’ என்பதனை முன்கூட்டியே தீர்மானித்து அங்கு அனுப்பிவைக்கப்படல் அவசியமாகின்றது.

இது முக்கியமானது. ஏனெனில் கொவிட் 19 வைரஸ் தொற்று ஏற்பட்ட பெரும்பாலான தாய்மாரில் குறைமாதப் பிரசவம் நடைபெற்றுள்ளதனை அவதானிக்கப்பட்டிருக்கின்ற காரணத்தினால் முன்கூட்டிய நடவடிக்கை அவசியமாகின்றது.

பிரசவம்:
இவர்கள் சாதாரண பிரசவம் நடைபெற அனுமதிக்கப்படுவர். இவர்களது பிரசவம் விசேட கவனிப்பின் கீழ் பிரத்தியேகமாக ஒழுங்கு செய்யப்பட்ட பிரசவ அறையிலே இடம்பெறுவதுடன் பணியாளர்களும் மட்டுப்படுத்தப்பட்ட அளவினராகவிருப்பர். சிசேரியன் சத்திரசிகிக்கை மேர்கொள்ளவேண்டியிருப்பின் பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்டுள்ள சத்திரசிகிச்சை கூடத்திலே நடைபெறும். அத்துடன் பிரசவமாகும் குழந்தையும்; ‘கொவிட் 19 வைரஸ் தொற்றுக்காகப் பரிசோதிக்கப்பட வேண்டியவர்’ என கணிக்கப்பட்டு பராமரிப்பில் வைக்கப்படுவார். மேலும் கருப்பையில் சிசுவைச் சூழவிருக்கும் அம்னியோன் திரவத்திலும் இவ்வைரசு இனங்காணப்படவில்லை. இக்காரணத்தினால் கர்ப்பத்தில் சிசுவிற்குத் தொற்று ஏற்படும் வாய்ப்பு குறைந்தளவிலேயே உள்ளது.

தாய்ப்பாலூட்டல்:
பிறந்த குழந்தைக்கான தாய்ப்பாலூட்டலில் எந்தவித தடையும் இதுவரையில் விதிக்கப்படவில்லை. ஆகவே தாயும் சேயும் ஒன்றாக இருக்க அனுமதிக்கப்படுவர். அத்துடன், தாய்ப்பாலில் கொவிட் வைரஸ் கிருமி இனம்காணப்படவில்லை. அத்துடன் தாய்ப்பாலில் பிறந்த குழந்தைக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களுடன் நோய் எதிர்ப்பு பதார்த்தங்களும், ஓமோன்களும் அடங்கியிருப்பதால் தாய்ப்பாலூட்டல் ஊக்குவிக்கப்படுகின்றது. மேலும் தாயிலிருந்து சேய்க்கு வைரஸ் தொற்றாமலிருப்பதற்கு தன்சுத்தம் பேணுதல், கைகளை சவர்க்காரமிட்டு கழுவுதல், குழந்தையை கையாள்வதை மட்டுப்படுத்துதல், பாலூட்டும் போது முகக்கவசம் அணிந்துகொள்ளல் முதலான நடைமுறைகளைத் தாய் கடைப்பிடிப்பது அவசியம்.

பிரசவத்தின் பின்:
சகல கவனிப்பின் பின்னர் அவர்களது இல்லத்திலும் முடிந்தவரை நம்பிக்கையுள்ள ஒருசிலர் மாத்திரம் தாய் சேய் இருவரையும் பராமரிப்பது சாலச்சிறந்தது. நாட்டிலிருந்து கொவிட் பிரச்சனை நீங்கும் வரை வெளியாரின் வரவு மட்டுப்படுத்தப்படுவதும் தாய் சேய் நலனுக்கு மிக அவசியமாகின்றது.

‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். இல்லத்தில் பாதுகாப்பாக இருப்போம்’ என்று தெரிவித்தார்.