கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை அவசரமாக கூட்டும் தேவை ஏற்படவில்லை

பாராளுமன்றத்தை அவசரமாக கூட்டும் தேவை தற்பொழுது இல்லை என்று உயர்கல்வி, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சரும், அமைச்சரவை இணைப்பேச்சாளருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அவசர நிலையின் போது கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை கூட்டும் அதிகாரம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு உண்டு இருப்பினும் தற்பொழுது கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்கு ஜனாதிபதியும் பிரதமரும் திட்டமிட்ட நடவடிகைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதனால் இந்த நோயை கட்டுப்படுத்தக்கூடிய ஆற்றல் தற்போதைய அரசாங்கத்துக்கு இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற கொவிட் -19 செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.

அமைச்சர் திருமதி பவித்திரா வன்னியாராச்சி, புத்தசாசன மத அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பந்துல ஹரிச்சந்திர, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க, அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் நாலக்க கலுவேவ, புறக்கோட்டை இறக்குமதி மற்றும் விநியோக சங்கத்தின் தலைவர் ஜி.இராயேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

கொரோனா வைரஸ் காரணமாக அத்தியாவசிய பொருட்களுக்கு எந்தவித தட்டுப்பாடும் இல்லை. நேற்று முன்தினம் பொது மக்கள் பெருமளவில் பொருட்களை கொள்வனவு செய்தமையை கண்டறிவதற்காக ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக புறக்கோட்டை பகுதிக்கு நான் விஜயம் செய்தேன்.
அங்கு மொத்த மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் சங்கத்தின் பிரதநிதிகளுடன் கலந்துரையாடினேன். பண்டிகைக்காலத்துக்கு தேவையான போதுமான பொருட்கள் கையிருப்பில் இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

சில வர்த்தக நிலையங்களுக்கும் நான் விஜயம் செய்தேன். பொருட்களுக்கு எந்தவித தட்டுப்பாடும் இல்லை என்று என்னால் திட்டவட்டமான தெரிக்க முடியும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.