விளையாட வேண்டிய வயதில் புத்தகச்சுமையை தூக்குகின்றனர் – தி.தவனேசன்

(படுவான் பாலகன்) விளையாட வேண்டிய வயதில் புத்தகச்சுமையை கொடுத்தமையால் தலைமைத்துவம், சகிப்புதன்மை, நட்புறவு போன்ற பண்புகள் குறைவடைந்திருக்கின்றன என மகிழடித்தீவு பிரதேச வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி தி.தவனேசன் குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட மகிழடித்தீவு சரஸ்வதி மகா வித்தியாலய இல்லமெய்வல்லுனர் திறனாய்வு போட்டிகள் புதன்கிழமை(22) மகிழடித்தீவு பொது விளையாட்டு மைதானத்தில், வித்தியாலயத்தின் அதிபர் பொ.நேசதுரை தலைமையில் நடைபெற்ற போது, அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இதனைக்குறிப்பிட்டார்.

வைத்தியர் தொடர்ந்தும் அங்கு உரையாற்றுகையில்,

விளையாடுவதன் மூலமாக உடல், உள ஆரோக்கியம் கிடைப்பெறுகின்றது. தற்கால கல்வி முறையில் விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. ஏட்டுக்கல்விக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது. இதன் காரணமாக பல பின்னடைவான செயற்பாடுகள் நடந்தேறுகின்றன. குறிப்பாக நல்ல தலைமைத்துவப்பண்பு, சகிப்புதன்மை என்பன குறைவடைந்து செல்கின்றன. அதேபோன்று நல் ஆளுமையுடன் கூடிய கல்விமான்கள் குறைவாகவே உள்ளனர்.

விளையாடவேண்டிய சிறுவயதில் புத்தகச்சுமையை திணித்துவிடுகின்றனர். இதன்காரணமாக நட்புறவும் இல்லாமல் போயிருக்கின்றது. அதேவேளை சமூகத்தினை வழிநடத்தக்கூடிய சிறந்த வழிகாட்டிகளும் இல்லாமல் சென்றுகொண்டிருக்கின்றனர். நிறுவனங்களும் வளர்ச்சியடையாமல் செல்வதற்கு, சகிப்பு, தலைமைத்துவம் இல்லாமை போன்றபண்புகளும் உள்ளடங்குகின்றன. மாணவர்களிடத்தில் சிறந்த தலைமைத்துவத்தினை வளர்ப்பதற்கு விளையாட்டுக்களில் மாணவர்களை ஈடுபடுத்த வேண்டும் என்றார்.