எட்டாயிரம் ஏக்கர் வேளான்மைச் செய்கை கைவிடும் நிலையில்; ஏங்கும் விவசாயிகள்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட பாரிய வெள்ளத்தின் காரணமாக வாழைச்சேனை கமநல சேவை பிரிவில் எட்டாயிரம் ஏக்கர் வேளான்மைச் செய்கை கைவிடப்பட்ட நிலையில் காணப்படுவதாக வாழைச்சேனை கமநல சேவை பிரதேச அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஏ.ரசீட் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக வாழைச்சேனை பிரதேச செயலாளர், கிரான் பிரதேச செயலாளர், வாகரை பிரதேச செயலாளர், ஓட்டமாவடி பிரதேச செயலாளர், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள விசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு மனமுடைந்த நிலையில் காணப்படுகின்றனர்.

மாதுறு ஒயா மற்றும் மகாவலி ஆறு பெருக்கெடுத்ததையடுத்து வாழைச்சேனை கமநல சேவை பிரிவில் அணைக்கட்டுக்கள் சில உடைப்பெடுத்த நிலையில் விவசாய நிலங்கள் முற்றுமுழுதாக பாதிக்கப்பட்ட நிலையில் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்தமையினால் எழுநூறுக்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களது வேளான்மையை முற்று முழுதாக இழந்த நிலையிலும், இதன்காரணமாக பெற்றுக் கொண்ட கடன் தொகையை எவ்வாறு செலுத்துவது என்ற கவலையிலும் காணப்படுகின்றது.

வாழைச்சேனை கமநல சேவை பிரிவில் பெரிய நீர்ப்பாசனம், சிறிய நீர்பாசன குளங்கள், மாதுறு ஓயா வடிச்சல் என்பவற்றை நம்பி விவசாய செய்கையில் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட விவசாயிகள் தங்களது ஜீவனோபாய தொழில் ஈடுபட்டு வருகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட பாரிய வெள்ளத்தின் காரணமாக வாழைச்சேனை கமநல சேவை பிரிவில் எட்டாயிரம் ஏக்கர் விவசாய செய்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், இதில் ஆறு ஓரமாக உள்ள விவசாய செய்கையில் ஆறாயிரம் ஏக்கரும், மண் வார்ப்பு காரணமாக இரண்டாயிரம் ஏக்கர் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை கமநல சேவை பிரதேச அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஏ.ரசீட் தெரிவித்தார்.

அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக கதிர் வரும் நிலையில் காணப்பட்ட வேளான்மைகளின் நெல் வீரியம் குறைந்த நிலையும், பதர் தன்மையுமாக காணப்படுகின்றது. அத்தோடு சில வேளான்மைகளில் நோய்த் தாக்கம் காணப்பட்டு உள்ளதை அவதானிக்க முடிவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

அதுமட்டுமல்லாது தங்களது விவசாய நிலம் தற்போது விளையாட்டு மைதானம் போன்று மணலால் சூழ்ந்து வெட்டையாக உள்ளதாகவும், மீண்டும் விவசாய செய்கை செய்வதாயின் வயல் நிலத்தினுள் காணப்படும் மண்ணை அகழ்வு செய்த பின்னர் தான் விவசாயம் செய்ய முடியும்.

ஆகவே இந்த விடயத்தில் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத் தலைவர், சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள், அரச அதிகாரிகள் அனைவரும் பாரபட்சமின்றி நடவடிக்கை மேற்கொண்டு விவசாயிகளுக்கு நஷ்ட ஈட்டினை உரிய முறையில் நியாயமாக வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் கேட்டுக் கொள்கின்றனர்.