மட்டக்களப்பில் 33288 பேர் பாதிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த இரு வாரங்களாக பெய்து வருகின்ற தொடர் மழையினால் 8 பிரதேச செயலகங்களில் 18 இடைத்தங்கல் முகாம்கள்; அமைக்கப்பட்டு மக்கள் பாதுகாப்பான முறையில் பராமறிக்கப்பட்டு வருகின்றனர்.
இரண்டு வாரங்களுக்குள் 9953 குடும்பங்களைச் சேர்ந்த 33288 பேர் இதுவரை  பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். கடந்த சில நாட்களாக பெய்து வந்த தொடர்மழையினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலக பிரிவுகளிலும் 39 வீடுகள் பகுதி அளவிலும் ஒரு வீடு முழுமையாகவும் சேதமடைந்துள்ளது. அத்தோடு மின்னல் தாக்கத்திற்கு ஒரு குடும்பத்தை சார்ந்த 5பேர் இம் மாவட்டத்தில்        பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
மாவட்டத்தில் கிரான் பிரதேச செயலகபிரிவில் ஊலாகாடு, இலுக்குவேதம், முருத்தானை, பொண்டுகள்சேனை, ஈரளகுளம், பெரியவெட்டுவான், பெருமாவெளி, அத்துடன் வாகரை பிரதேச செயலக பிரிவில் கட்டுமுறிவு , தோனிதாட்டமடு, ஓமடியாமடு , மதுரங்கேனி ,இருமிச்சி , நாசியந்தீவு, ஆகிய பகுதிகள் நீரினால் மூழ்கிய நிலையில் உள்ளது.
இப்பகுதிக்கான போக்குவரத்தினை இயந்திரபடகு மூலம் மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் அவர்களின் பணிப்புரைக்கமைய அனர்த்த முகாமைத்துவ நிலையம் ஒழுங்கு செய்துள்ளது.
வெள்ள அனர்த்தத்தினால் பாதிப்புக்குள்ளாகிய மக்களுக்கான சமைத்த உணவு மற்றும் உளர் உணவு பொருட்களை விரைவாகவும் துரிதமாகவும் செயல்படுத்துவதற்கு அனர்த்த முகாமைத்துவத்தின் ஊடாக மேலதிக ஆலணியினை நியமித்து துரித படுத்தப்பட்டு வருவதாக அரசாங்க அதிபர் குறிப்பிட்டார்.